

உத்தரப் பிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் டிஎஸ்பி, ஆய்வாளர், இரு உதவி ஆய்வாளர்கள் என 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல்வர் ஆதித்யநாத் மீது எதிர்க்கட்சிகள் காட்டமான விமர்சனங்களை வைத்துள்ளன.
கான்பூர் மாவட்டம், சவுபேபூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதி திக்ரு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே. இவர் மீது கொலை, கொள்ளை என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதிதாக இவர் மீது பதிவு செய்யப்பட்ட கொலைமுயற்சி வழக்கில் ரவுடி துபேயைக் கைது செய்ய டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீஸார் சென்றனர்.
அப்போது திக்ரு கிராமத்தில் வீட்டின் மாடியில் மறைந்திருந்த ரவுடிகள் சிலர் போலீஸார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, காவல் நிலைய அதிகாரி மகேஷ் யாதவ், உதவி ஆய்வாளர்கள் அனுப் குமார், நெபுலால், காவலர்கள் சுல்தான் சிங், ராகுல், ஜிதேந்திரா, பப்லு ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படையும் அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆளும் பாஜக தலைமையிலான அரசையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வறுத்தெடுத்து வருகின்றன.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ரவுடிகள் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த 8 போலீஸாரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது, கிரிமினல்களுக்கு அரசின் மீது எந்த அச்சமும் இல்லை. சாமானிய மக்கள் முதல் போலீஸார் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பானவர் முதல்வர். இந்தச் சம்பவத்தில் அவர் கடினமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதில் கருணை காட்டக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “உத்தரப் பிரதேசம் தற்போது கொலைகார பூமியாக மாறிவிட்டது. 'ரோஹி' (நோயாளி)யின் ஆட்சியில் காட்டாட்சி (ஜங்கில்ராஜ்) நடக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் கான்பூர் கிரிமினல்களுக்கு ஆதரவு அளித்ததால், 8 போலீஸாரின் உயிர் பறிபோயுள்ளது.
வீரமரணம் அடைந்த 8 போலீஸாருக்கும் சமாஜ்வாதி கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். வீரமரணம் அடைந்த ஒவ்வொரு போலீஸாரின் குடும்பத்தாருக்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களுக்கும், கிரிமினல்களுக்கும் இருக்கும் தொடர்பையும் வெளிக்கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கான்பூரில் 8 போலீஸார் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்துக்கு வெட்கக்கேடு, துரதிர்ஷ்டமானது. சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநில அரசு மெத்தனமான இருந்துவிட்டது. இனிமேல் கவனமாக இருத்தல் அவசியம்.
இந்தக் கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களை அரசு விடக்கூடாது. இதற்கான சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கவேண்டும். 8 போலீஸாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.