

பிஹாரில் வரும் அக்டோபரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்ய தயக்கம் காட்டி வருகிறனர்.
பிஹாரில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் முதல்வராக நிதிஷ் குமார் பதவிவகிக்கிறார். இவரது பதவிக்காலம் அக்டோபர் இறுதியில் முடிவடைவதால் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் கட்சித் தலைவர்கள் சென்று வாக்குசேகரிப்பது முக்கியம். ஆனால், தற்போதைய கரோனா அச்சுறுத்தல் இதற்கு பெரும் தடையாக உள்ளது. இதனால் பிஹார் மாநில கட்சிகளின் தலைவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இதனிடையே, தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அம்மாநிலத்தின் சுமார் 8 அரசியல்வாதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு அமைச்சர், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் அடக்கம். எனினும், லாலு கட்சியின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான ரகுவன்ஷ் பிரசாத் சிங் (72) தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமான முதல் அரசியல்வாதியாக வீடு திரும்பியுள்ளார். பாஜகவின் முன்னாள் எம்.பி. புத்துல் குமாரியும் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்துள்ளார். இது மற்ற அரசியல்வாதிகளை உற்சாகப்படுத்தினாலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வது அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’நாளேட்டிடம் பிஹார் மூத்த பத்திரிகையாளர்கள் கூறும்போது, "தங்கள் முன்பு கூடியுள்ள கூட்டத்தைப் பொறுத்தே, மேடையில் பேசும் அரசியல்வாதிகளுக்கு பிரச்சாரத்தில் உத்வேகம் வரும். அதற்குதடை இருக்கும் இந்நேரத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்துடன் மத்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து, இனி வரும் தேர்தல்களில் பிரச்சாரம் செய்வது தொடர்பாக புதிய முறையை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பிரச்சார நேரத்தையும் குறைத்து ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது" என்றனர்.
இதனிடையே, காணொலிக் காட்சி மற்றும் இணையதளம் மூலம் பாஜகவும் அதன் கூட்டணியான ஐக்கிய ஜனதா தளமும் தனது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த மாதம் தொடங்கி விட்டன. இதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பற்றி பல்வேறு கருத்துகள் வெளியானாலும், உண்மை என்ன என்பதை யாராலும் உறுதியாகக் கூற முடியாமல் உள்ளது. எனவே, கரோனா காலத்தின் தேர்தல் மீதான கொள்கை முடிவை தேர்தல் ஆணையம் வெளியிட்ட பின்னர் தங்கள் பிரச்சாரவியூகத்தை அமைக்க மற்றஅனைத்து கட்சிகளும் காத்திருக்கின்றன.