ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிசெய்வதற்கு ரூ.60 லட்சம் கோடி அந்நிய முதலீடு தேவை: மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

நிதின் கட்கரி
நிதின் கட்கரி
Updated on
2 min read

‘‘கரோனா வைரஸ் ஊரடங்கு நடவடிக்கையால் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட ரூ.50 லட்சம் கோடி முதல் ரூ.60 லட்சம் கோடி வரை அந்நிய முதலீடு தேவைப்படுகிறது’’ என்று மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் அந்நிய நேரடி முதலீடு மிகவும் அவசியம். இத்தகைய முதலீடுகள் நமது பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுவதோடு முடங்கியுள்ள நிதி புழக்கத்தை அதிகரிக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக நிதின் கட்கரி அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:

கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை, விமான நிலையம், உள்நாட்டு நீர்வழி பாதைகள், ரயில்வே சரக்கு போக்குவரத்து, அகல ரயில்பாதை, மெட்ரோ உள்ளிட்ட துறைகள் மட்டுமின்றி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிலும் முதலீடு தேவைப்படுகிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) உள்ளிட்டவற்றுக்கு அந்நிய முதலீடு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது. அதேபோல நெடுஞ்சாலைத் துறைகளில் அந்நிய முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. துபாய் மற்றும் அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்கள் மத்தியில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

சில சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந் நிறுவனங்களின் கடந்த 3 ஆண்டு லாப கணக்கை கருத்தில் கொண்டு முதலீடு செய்யுமாறு வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சு நடத்தப்படுகிறது. இந் நிறுவனங்கள் ஜிஎஸ்டி செலுத் திய அளவு, வருமான வரி செலுத்திய தொகை ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளு மாறும் இவை முதலீட்டாளர் களுக்கு அளித்த ஈவுத் தொகை உள்ளிட்டவற்றையும் கணக்கில் கொண்டு முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியை அதிகரிக்க நமது தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம். அதே நேரம் இறக்குமதிகளை குறைத்து சுய சார்பு நிலையை எட்ட வேண்டும் என்பதையே பிரதமரும் அறிவுறுத்தி வருகிறார். அதற்கு கட்டமைப்பு வசதிகள் பெருக வேண்டியது மிகவும் அவசியம். உலகமே தற்போது மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ளது. அத்தகைய சூழலில் நாம் போர்க்கால அடிப்படையில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம்.

அரசு, தனியார் பங்களிப்போடு மிகப் பெரிய திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் வேலை வாய்ப்பும் பெருகும், பொருளாதாரமும் மேம்படும். தற்போது 22 நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் வழி சாலைத் திட்டமும் அடங்கும்.

டெல்லி - மும்பை வழித்தட உருவாக்கம் குறித்து மகாராஷ்டிர அரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம். தானே பகுதியில் தோல் தொழில் சார்ந்த தொழிற்பேட்டைகள் (கிளஸ்டர்) உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் தொழிற்சாலைகள், ஊழியர் குடியிருப்பு, பள்ளிக்கூட வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும்,. இங்கு பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் குறைந்த விலை குடியிருப்புகளும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in