

கரோனா சிகிச்சைக்கான முக்கிய மருத்துவ சாதனங்களின் விலை உயர்வு ஏற்படாமல் கண்காணிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா நோய்த்தொற்று சூழ்நிலையில், நாட்டில் இந்த நோயைக் கையாள்வதற்கான முக்கிய மருத்துவச் சாதனங்கள் கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய மத்திய அரசு கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்குத் தேவைப்படும் முக்கிய மருத்துவ சாதனங்களின் பட்டியலை சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. நாட்டில் இந்த சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பார்மசூட்டிகல் விலைநிர்ணய ஆணையத்தை (என்.பி.பி.ஏ.) இந்த அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
நுகர்வோருக்கு கட்டுப்படியாகும் விலைகளில், உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. மருத்துவ சாதனங்கள் அனைத்தும் ரசாயன மருந்துகள் என்ற பட்டியலில் கொண்டு வரப்பட்டு, ரசாயன மருந்துகள், அழகுசாதனப் பொருள்கள் சட்டம் 1940 மற்றும் ரசாயன மருந்துகள் விலைகள் (கட்டுப்பாட்டு உத்தரவு), 2013-இன் கீழ் 2020 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
முக்கிய மருத்துவ சாதனங்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைப்பதற்காக, DPCO, 2013-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்களிடம் இருந்து (i) நாடித் துடிப்பறியும் ஆக்சிமீட்டர் மற்றும் (ii) ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் ஆகியவற்றின் விலைகள் குறித்த விவரங்களை அளிக்குமாறு என்.பி.பி.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது.
2020 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்த விலையில் இருந்து ஆண்டுக்கு 10 சதவீதத்துக்கும் மிகாத அளவுக்கு மட்டுமே விலை உயர்வு இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சாதனங்கள் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் மக்கள் சபைக் குழு ஆகியவற்றுடன் தொடர்புடைய துறையினருக்கான கலந்தாலோசனைக் கூட்டம் 2020 ஜூலை 1-ம் தேதி என்.பி.பி.ஏ.-வில் நடத்தப்பட்டது. முக்கிய மருத்துவ சாதனங்களின் உற்பத்தியாளர்கள்,
இறக்குமதியாளர்கள், நாட்டில் அந்த சாதனங்கள் போதிய அளவு கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அனைத்து மருத்துவச் சாதனங்களும் 2020 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து DPCO, 2013 -இன் கீழான விலைகள் ஒழுங்குமுறைகளின் கீழ் வந்திருப்பதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி பத்தி 20-இல் குறிப்பிட்டுள்ளவாறு மருத்துவ சாதனங்களின் விலைகள் கண்காணிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. இது வழக்கமான வியாபாரத்துக்கு உகந்த நேரம் கிடையாது என்றும், மக்களின் ஆரோக்கியம் அவசரநிலைத் தேவையில் இருக்கும் போது லாபம் சம்பாதிப்பதற்கான காலமாக இதைக் கருத்தக் கூடாது என்றும் என்.பி.பி.ஏ. தலைவர் வலியுறுத்தினார்.
இப்போதுள்ள சூழ்நிலையில், முக்கியமான மருத்துவச் சாதனங்களின் சில்லரை விலைகளை குறைக்க மருத்துவச் சாதனங்கள் உற்பத்தியாளர் சங்கங்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. என்-95 முகக்கவச உறைகள் தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள் செய்ததைப் போல இந்தத் துறையினரும் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.