Published : 02 Jul 2020 07:39 PM
Last Updated : 02 Jul 2020 07:39 PM

தனியார் மருத்துவர்களும் கரோனா பரிசோதனைக்கு பரிந்துரைக்கலாம்: மத்திய அரசு அனுமதி

தனியார் மருத்துவர்களும் கரோனா பரிசோதனைக்கு பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் காரணமாக, அரசு மருத்துவர்கள் மட்டுமின்றி, எந்தவொரு பதிவுபெற்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தாலே தற்போது, கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிர்ணயித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சோதனை மேற்கொள்ளப்பட வேண்டிய எந்தவொரு நபருக்கும், தனியார்
மருத்துவர்கள் உட்பட, தகுதிபெற்ற அனைத்து மருத்துவர்களும், கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைக்க அனுமதிப்பதன் மூலம், சோதனைகளை விரைவாக மேற்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு உறுதியாக அறிவுறுத்தியுள்ளது.

நோய்த்தொற்று உடையவர்களை விரைவில் கண்டறிந்து, தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஏதுவாக, சோதனை – தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல் – சிகிச்சையளித்தல் என்பதே முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும் என்று மாநில, யூனியன் பிரதேச அரசுகளை வலியுறுத்தியுள்ள மத்திய அரசு, அந்தந்த மாநிலம், யூனியன் பிரதேசத்தில் உள்ள பரிசோதனை ஆய்வுக்கூடங்களின் முழுத் திறனும் பயன்படுத்திக் கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம், அனைத்து ஆய்வுக்கூடங்களின் முழுத்திறனும் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுவதோடு, குறிப்பாக தனியார் ஆய்வகங்களின் திறனைப் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைவார்கள்.ஒரு தொலைநோக்கு நடவடிக்கையாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, எந்த ஒரு தனிநபருக்கும் சோதனை மேற்கொள்ள ஆய்வகங்களை அனுமதிக்க வேண்டுமென, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் உறுதிபட பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், விரைவான பரிசோதனை மூலம், நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தி, உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதால், எந்த ஒரு நபரும் பரிசோதனை மேற்கொள்வதை, மாநில நிர்வாகம் தடுக்கக்கூடாது என்றும் அந்தக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பைக் கண்டறிவதற்கு மிகவும் தரமான சோதனையாகக் கருதப்படும் ஆர்.டி.-பி.சி.ஆர் தவிர, ரேபிட் ஆன்டிஜன் பாயின்ட் – ஆப் – கேர் சோதனைகளையும் மேற்கொள்வதன் வாயிலாக, சோதனை எண்ணிக்கையைப் பெருமளவு அதிகரிக்குமாறும் மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிர்ணயித்துள்ள பரிசோதனைக்கான அளவுகோலின்படி, ரேபிட் ஆன்டிஜன் சோதனை, விரைவாக, எளிமையாக, பாதுகாப்பாக மற்றும் மருத்துவமனைகள் மட்டுமின்றி, கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களிலும் பயன்படுத்தக்கூடியது ஆகும். இத்தகைய சோதனைக் கருவிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தால், பரிசோதனை செய்ய விரும்பும் மக்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x