கரோனா சந்தேக மரணத்தில் உடலைத் தாமதிக்காமல் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற சந்தேகம் வரும்போது, அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவு வரும் வரை உடலை வைத்திருக்காமல் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், உடல் அடக்கம் என்பது, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில் பொது சுகாதாரச் சேவையின் இயக்குநர் (டிஜிஹெச்எஸ்) ராஜீவ் கார் கூறியிருப்பதாவது:

''கரோனா வைரஸால் ஒருவர் இறந்திருக்கலாம் எனச் சந்தேகப்படும் நிலையில், எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவு வந்தபின்புதான் உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கிறார்கள் எனும் புகார்கள் தொடர்ந்து வந்தன. அதன் அடிப்படையில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறேன்.

கரோனா வைரஸால் ஒருவர் இறந்துவிட்டார் என்று சந்தேகிக்கும் பட்சத்தில் பரிசோதனை முடிவு ஆய்வகத்திலிருந்து வரும் வரை உடலை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் இருக்க வேண்டாம். இறந்தவரின் உடலை எவ்விதமான தாமதமும் இன்றி உறவினர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், அந்த உடலைத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்திய விதிமுறைகள்படி, அடக்கம் செய்ய வேண்டும். அதாவது உடலை எடுத்துச் செல்லும் ஊழியர்கள் பிபிஇ உடை அணிந்து இருக்க வேண்டும்

ஒருவேளை உடலை அடக்கம் செய்தபின் பரிசோதனை முடிவில் இறந்தவருக்கு கரோனா இருப்பது தெரியவந்தால், அவர் தொடர்புடைய நபர்கள், அவருடன் தொடர்பில் இருவந்தவர்கள், சிகிச்சையளித்த மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in