

குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நரேந்திர மோடி, சட்டமன்றத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றி விடைபெற்றார். அப்போது மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்ட மோடி, தான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளும்படி கூறினார்.
பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த மோடிக்கு பிரிவு உபசார விழா நடத்தும் வகையில் சட்ட மன்றத்தில் சிறப்புக் கூட்டத்துக்கு புதன்கிழமை ஏற்பாடு செய்யப் பட்டது.
கூட்டத்தில் மோடி பேசியதாவது: “நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துக்கொள் ளுங்கள். நான்காவது முறையாக முதல்வர் பதவி வகித்த நான், இப்போது பிரதமராகப் போகிறேன். எப்போது மீண்டும் இங்கு திரும்பி வருவேன் என்பது தெரியாது. எனது பணியை சரிவர செய்யாமல் இருந்திருந்தாலோ, எனது நடத்தையில் குறைபாடு இருந்திருந்தாலோ அதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
இது மன்னிப்பு பெற வேண்டிய நாள். உங்கள் அனைவரையும் (எம்.எல்.ஏ.க்கள்) மதிக்கிறேன். குறிப்பாக எதிர்க்கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறிய மோடி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “வளர்ச்சிப்பாதையில் தொடர்ந்து நீங்கள் பயணிப்பதில்தான் எனது வெற்றி அமைந்துள்ளது. எனக்குப் பிறகு குஜராத் மிகுந்த எழுச்சி பெறும்.
பிரதமராக பதவியேற்ற பின்பு பாகுபாடின்றி அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவேன். அதோடு, குஜராத்திற்கான உரிமைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவேன்.
தனி நபர் சார்ந்த அணுகுமுறை நீடித்திருக்காது. நல்ல யோசனை களை அமைப்பு ரீதியாக செயல் படுத்த வேண்டும். அப்போதுதான் யார் வந்தாலும், போனாலும் நல்ல பணிகள் தொடர்ந்து நடைபெறும். கடந்த 12 ஆண்டுகளாக குஜராத்தில் அதைத்தான் செய்துள்ளோம்.
திட்டங்களை அமல்படுத்து வதில் அரசின் செயல்பாடு குறித்து மத்திய கணக்கு தணிக்கையாளர் தரும் அறிக்கைகளை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது. அதில் கூறப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதைத்தான் நான் செய்தேன்.
ஜனநாயகத்தில் மக்கள் பிரதி நிதிகள்தான் முதன்மையானவர்கள் என்பதே எனது கருத்து. அவர்கள் எழுப்பும் பிரச்சினைகளை, மக்களின் குரலாகக் கருத வேண்டும்.
பொதுவாக ஒருவர் புதிய இடத்துக்குச் செல்கிறார் என்றால், தன்னுடன் மொழி, கலாச்சாரம் உள்ளிட்டவற்றையும் எடுத்துச் செல்கிறார் என்றுதான் அர்த்தம். நான் பதவியேற்ற பிறகு பிரதமர் அலுவலகத்தில் குஜராத்தி மொழி யும் ஒலிக்கப்போகிறது. நமது உணவு வகைகளையும் அங்கே பார்க்கலாம்” என்றார்.
பிரதமர் அலுவலகத்தில் குஜராத் மாநிலத்துக்கென சிறப்பு மையத்தை தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த மோடி, “தனி யாக மையம் அமைக்க வேண்டிய தில்லை. குஜராத்திற்கென எனது இதயத்திலேயே நிரந்தரமாக மையம் உள்ளது” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.