

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துள்ளது. 5 நாட்களில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டதால் விரைவாக இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 19 ஆயிரத்து 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்திலிருந்து 5 லட்சத்தை எட்ட 6 நாட்கள் எடுத்துக்கொண்ட நிலையில் 5 லட்சத்திலிருந்து 6 லட்சத்தை 5 நாட்களில் எட்டியுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் ஒட்டுமொத்த பாதிப்பு 6 லட்சத்து 4 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 59 ஆயிரத்து 859 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தோர் சதவீதமும் ஏறக்குறைய 60 சதவீதத்தை எட்டியுள்ளது. மருத்துவமனையில் தற்போது 2 லட்சத்து 26 ஆயிரத்து 947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 434 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 17 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 6-வது நாளாக கரோனா வைரஸ் பாதிப்பு 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஜூன் மாதம்தான் மோசமாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்த கரோனா வைரஸ் பாதிப்பான 6 லட்சத்தில் ஏறக்குறைய 4 லட்சம் பேர் ஜூன் மாதம்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது 3 லட்சத்து 94 ஆயிரத்து 948 பேர் ஜூன் மாதத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 68 சதவீத பாதிப்பு ஜூன் மாதத்தில்தான் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கரோனா உயிரிழப்புகளான 17 ஆயிரத்து 834 பேரில் 70 சதவீதம் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும்தான் நடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் நடந்த 434 உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 198 பேர் பலியாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 63 பேர், டெல்லியில் 61 பேர், உத்தரப் பிரதேசம், குஜராத்தில் தலா 21 பேர், மேற்கு வங்கத்தில் 15 பேர், மத்தியப் பிரதேசத்தில் 9 பேர், ராஜஸ்தானில் 8 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா, கர்நாடகாவில் தலா 7 பேர், ஆந்திராவில் 6 பேர், பஞ்சாப்பில் 5 பேர், ஹரியாணா, ஜம்மு காஷ்மீரில் தலா 4 பேர், பிஹாரில் 3 பேர், சத்தீஸ்கர், கோவாவில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 8,053 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 2,803 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,867 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,264 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 683 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 581 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 718 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 421 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 267 ஆகவும், ஹரியாணாவில் 240 ஆகவும், ஆந்திராவில் 193 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 253 பேரும், பஞ்சாப்பில் 149 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 105 பேரும், பிஹாரில் 70 பேரும், ஒடிசாவில் 25 பேரும், கேரளாவில் 24 பேரும், உத்தரகாண்டில் 41 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 10 பேரும், ஜார்க்கண்டில் 15 பேரும், அசாமில் 12 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 12 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 268 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 93,154 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 49 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 52,946 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89,802 பேராக அதிகரித்துள்ளது. 59,952 பேர் குணமடைந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 33,232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,030 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 18,312 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 13,861 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24,056 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 19,170 பேரும், ஆந்திராவில் 15,252 பேரும், பஞ்சாப்பில் 5,668 பேரும், தெலங்கானாவில் 17,357 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 7,695 பேர், கர்நாடகாவில் 16,514 பேர், ஹரியாணாவில் 14,941 பேர், பிஹாரில் 10,249 பேர், கேரளாவில் 4,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,439 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 7,316 பேர், சண்டிகரில் 446 பேர், ஜார்க்கண்டில் 2,521 பேர், திரிபுராவில் 1,396 பேர், அசாமில் 8,227 பேர், உத்தரகாண்டில் 2,947 பேர், சத்தீஸ்கரில் 2,940 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 979 பேர், லடாக்கில் 973 பேர், நாகாலாந்தில் 459 பேர், மேகாலயாவில் 52 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹாவேலியில் 215 பேர், புதுச்சேரியில் 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 272 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 160 பேர், சிக்கிமில் 101 பேர், மணிப்பூரில் 1,260 பேர், கோவாவில் 1,387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.