

வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் முடித்த மருத்துவர்கள் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கேட்டு வருகின்றனர். ஆனால் இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) பதிலளிக்காமல் மவுனம் காக்கிறது.
சீனா, பிலிப்பைன்ஸ், உக்ரைன், வங்கதேசம், ரஷ்யா,நேபாளம் மற்றும் கஜகஸ்தான்உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் எம்பிபிஎஸ் பயில்வது உண்டு. இவர்களில்தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 70 சதவீதம் இடம்பெறுவது உண்டு. இதிலும் தமிழர்கள் எண்ணிக்கை பாதிக்கும் மேல் இருந்து வருகிறது.
இவ்வாறு வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் முடித்தவர்கள் இந்தியாவில் நேரடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவோ, உயர்கல்வியை தொடரவோ முடியாது. இதற்கு, வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்காக இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெறுவது கட்டாயம் ஆகும்.
இந்நிலையில், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற இந்தியர்களின் திறன் வீணாகும் நிலைஉருவாகி உள்ளது. இதனால் அவர்களை கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் சிகிச்சைஅளிக்க அனுமதிக்க வேண்டும்என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக அம்மருத்துவர்களின் சங்கங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வெளிநாட்டில் பயின்ற மருத்துவர்கள் சங்க தலைவர் ஏ.நஜ்ரூல் அமீன் கூறும்போது, "பிரிட்டன் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் கரோனா சிகிச்சைக்கான மருத்துவர்கள் பற்றாக்குறையால் இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதேநிலை இந்தியாவிலும் இருப்பதால் இங்கும் இறுதியாண்டு மாணவர்கள் பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கின்றனர்.
இதில், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களையும் சேர்ப்பதில் தவறு இல்லை என எடுத்துக்கூறி மார்ச் 26-ம் தேதிபிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினோம். இதன் மீது முடிவு எடுக்குமாறு எம்சிஐ-க்கு சுகாதாரத்துறை அமைச்சர் பரிந்துரை செய்தார். இருப்பினும் இந்த விஷயத்தில் எம்சிஐ முடிவு எடுக்காமல் தயக்கம் காட்டுகிறது" என்றார்.
80% பேர் தோல்வி
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டெல்லியில் உள்ள எம்சிஐ வட்டாரம் கூறும்போது, "வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் பயின்ற மருத்துவர்களில் பெரும்பாலனவர்களால் இங்கு நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற முடிவதில்லை. சுமார் 80 சதவீதம் பேர் தோல்வி அடைகின்றனர். இந்த நிலையில் அவர்களை எப்படி அனுமதிப்பது என எம்சிஐ யோசனை செய்கிறது" என்றனர்.
இந்த தேர்வுக்காக தற்போதுஇந்தியாவில் சுமார் 30,000 மருத்துவர்கள் காத்திருக்கின்றனர். இந்த வருடம் கரோனா வைரஸ்பரவலினால் எம்சிஐ தேர்வை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.