Last Updated : 02 Jul, 2020 08:26 AM

 

Published : 02 Jul 2020 08:26 AM
Last Updated : 02 Jul 2020 08:26 AM

சீனாவின் சமூக ஊடகமான ‘வீபோ’ தளத்திலிருந்து விலகினார் பிரதமர் மோடி: வெளியேறுவதில் நீடிக்கும் சிக்கல்?

சீனாவின் சமூக ஊடகமான வீபோ தளத்திலிருந்து வெளியேறியுள்ள பிரதமர் மோடி.

புதுடெல்லி

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து அந்நாட்டு சமூக ஊடகமான வீபோவிலிருந்து தனது கணக்கை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி வெளியேறினார்.

உலகம் முழுவதும் மக்களை எளிதில் இணைக்கும் தளமாக ஃபேஸ்புக் இருப்பதைப் போல், சீனாவில் ‘வீபோ’ எனும் தளம் அந்நாட்டு மக்களிடையே பிரபலம். அந்தத் தளத்திலிருந்து பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு உறுப்பினராக இருந்தார்.

சீனப் புத்தாண்டு, தலைவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது போன்ற முக்கிய நிகழ்வுகளில் பிரதமர் மோடி இதில் கருத்துகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். இதுவரை 115 பதிவுகளை பிரதமர் மோடி தனது கணக்கில் பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடியை ஏறக்குறைய 2.44 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்தனர்.

இந்நிலையில், கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த விவகாரம் இந்திய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவுக்கு எதிரான மனநிலை உள்நாட்டில் அதிகரித்து வருகிறது, மத்திய அரசும் பல்வேறு ஒப்பந்தங்களில் இருந்து சீன நிறுவனங்களை விலக்கியும், தடை விதித்தும் வருகிறது.

எல்லையில் சீன ராணுவத்துக்குத் தகுந்த பதிலடியை இந்திய ராணுவம் அளித்துள்ளது என்று பிரதமர் மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சியின்போது மக்களிடம் தெரிவித்தார். இந்தச் சூழலில் சீனாவுக்குத் தனது வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுச் சமூக ஊடகமான வீபோவிலிருந்து தனது கணக்கை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக பொதுச்செயலாளர் எல்.சந்தோஷ் கூறுகையில், “சீனாவுக்கு தகுந்த எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுச் சமூக ஊடகமான வீபோவிலிருந்து பிரதமர் மோடி வெளியேறிவிட்டார். ஏற்கெனவே எல்லையில் ராணுவம் மூலம் பதிலடி கொடுத்த பிரதமர் மோடி, தற்போது தனிப்பட்ட முறையிலும் பதிலடி கொடுத்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில் இப்போது அந்நாட்டுச் சமூக ஊடகத்திலிருந்து மோடி வெளியேறிவி்ட்டார்” எனத் தெரிவித்தார்.

ஆனால், வீபோ தளத்திலிருந்து பிரதமர் மோடி அதிகாரபூர்வமாக இன்னும் வெளியேறவில்லை. அவரின் கணக்கில் இருந்த பெரும்பாலான பதிவுகள் நீக்கப்பட்ட நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி இணைந்திருக்கும் புகைப்படம் மட்டும் இருக்கிறது.

மேலும், ட்விட்டர் தளத்தைப் போல் ஒருவர் எளிதாகத் தனது கணக்கை முடித்துக்கொண்டு வீபோ தளத்திலிருந்து வெளியேறிவிட முடியாது.

வீபோ தளத்தில் பிரதமர் மோடி போன்ற நாட்டின் தலைவர்கள் கணக்கு தொடங்கிவிட்டு, வெளியேற வேண்டுமென்றால், அதற்கு பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றன. அவை குழப்பமான நடைமுறையாகும். அந்த நிறுவனத்திடமிருந்து முறையாக அனுமதி கிடைத்தபின்புதான் வெளியேற முடியும். இப்போதுள்ள சூழலில் சீனாவிடம் அனுமதி கிடைப்பது எளிதல்ல எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x