அரசு பங்களாவை காலி செய்யுமாறு பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ்

அரசு பங்களாவை காலி செய்யுமாறு பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ்
Updated on
1 min read

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மகளும், கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி தங்கியுள்ள அரசு பங்களாவை காலி செய்யுமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகரப்புற விவகாரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரியங்கா காந்திக்கு டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள 35-வது எண்ணுள்ள பங்களாவை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது. சிறப்பு பாதுகாப்புக் குழுவின் (எஸ்பிஜி) பாதுகாப்பில் பிரியங்கா காந்தி இருந்ததால் கடந்த 1997-ம் ஆண்டு பாதுகாப்பு காரணத்துக்காக இந்த அரசு பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் எஸ்பிஜி பாதுகாப்பிலிருந்து இசட் பிளஸ் பாதுகாப்புக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், இன்னும் ஒரு மாதத்துக்குள் அரசு வீட்டை காலி செய்யும்படி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நேற்று பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், "மத்திய உள்துறை விவகார அமைச்சகம், தங்களுக்கு வழங்கிய சிறப்பு பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டுள்ளது. தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எஸ்பிஜி பாதுகாப்பு இல்லாத நபர்களுக்கு இந்த இடத்தில் வீடு வழங்க இயலாது.

இதன் காரணமாக தங்களுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட பங்களாவுக்கான சலுகை ரத்து செய்யப்படுகிறது. இதனால் பங்களாவை காலி செய்ய இன்று முதல் ஒரு மாதம் காலஅவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகும் வீட்டை காலி செய்யவில்லை என்றால், விதிமுறைப்படி சேதாரம் அல்லது அபராத வாடகை வசூலிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in