

கர்நாடக அரசின் தலைமைச் செயலர் விஜய பாஸ்கர் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஜூலை 31-ம் தேதி வரை மூடப்படும். திரையரங்கம், உடற்பயிற்சி நிலையம், மதுபான விடுதி, பூங்கா, மெட்ரோ ரெயில் உள்ளிட்டவையும் இயங்காது.
ஜூலை 31-ம் தேதிவரை இரவு 8 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேரத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். வரும் 5-ம் தேதியில் தொடங்கி ஆகஸ்ட் 2-ம் தேதி வரையிலான 5 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதே போல ஜூலை 4-ம் தேதியில் தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரையிலான அனைத்து சனிக்கிழமைகளும் அரசு அலுவலகங்கள் இயங்காது. தனியார் அலுவலகங்களும், வணிக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் 30 சதவீத ஊழியர்களுடன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இயங்கலாம். பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
கர்நாடகாவில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க முன் அனுமதி பெற தேவை இல்லை. அதே போல வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு வருவோருக்கும் எந்த தடையும் இல்லை. இதற்காக முன் அனுமதி பெற தேவையில்லை. அதே வேளையில் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு விஜய பாஸ்கர் தெரிவித்தார்.