Published : 02 Jul 2020 06:39 AM
Last Updated : 02 Jul 2020 06:39 AM

எல்லையில் போர் பதற்றம் நீடிப்பு: சீன தரப்பில் 20 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்; எதையும் சந்திக்க தயார் நிலையில் இந்திய ராணுவம்

கிழக்கு லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சுமார் 20 ஆயிரம் வீரர்களை சீன ராணுவம் குவித்துள்ளது. இதற்கு இணையாக இந்திய ராணுவமும் எல்லையில் படைகளை குவித்து எதற்கும் தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. இதன்காரணமாக எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது.

கடந்த மே மாத தொடக்கத்தில் இமயமலையின் கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக கடந்த மே 5, 6-ம் தேதிகளில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. கடந்த 6-ம் தேதி இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சீன படைகள் வாபஸ் பெறப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த மாதம் 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கர்னல் சந்தோஷ் பாபு உட் பட 20 இந்திய வீரர்கள் உயிரிழந் தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட் டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் எல்லைப் பகுதி யில் இரு நாடுகளும் ராணுவப் படைகளை குவித்து வருவதால் பதற்ற மான சூழல் உருவாகியுள்ளது.

ஜின்ஜியாங் மாகாணத்தின் வடபகுதிகளில் 10 ஆயிரம் வீரர் களை கொண்ட படைப்பிரிவை சீனா நிறுத்தியுள்ளது. இந்திய வீரர்கள் முகாமிட்டுள்ள முனையில் இருந்து ஆயிரம் கி.மீ. தொலைவில் இந்தப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏதேனும் பிரச்சினை என்றால் 48 மணி நேரத்தில் இந்தப் பகுதியை சீன வீரர்கள் வந்தடைய முடியும் என கூறப்படுகிறது.

இதுபற்றி இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘எல் லைப் பிரச்சினைக்கு தீர்வு காண சீனாவும் இந்தியாவும் ராணுவ அதி காரிகள் நிலையிலும் தூதரக நிலையிலும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் தமது எல்லைக்குள் படை வீரர்களையும் ஆயுதங்களை யும் கணிசமாக குவித்து வருகிறது சீனா. இந்திய எல்லைப் பகுதிக்கு அருகில் சீனா குவித்துள்ள படை களின் நடமாட்டம், செயல்பாடுகள் குறித்து மிக கவனமாக கண் காணித்து வருகிறோம்’’ என தெரிவித்தன.

வழக்கமாக திபெத் பகுதியில் இரு படைப் பிரிவுகளைத்தான் சீனா நிறுத்தும். ஆனால், தற்போது இந்திய நிலைகளுக்கு எதிராக பயன்படுத்தும் வகையில் 2 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள சீன மைய பகுதிகளில் இருந்து கூடுதலாக 2 படைப் பிரிவுகளை சீனா வர வழைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரத்தில் சீனாவுக்கு நிக ராக இந்தியாவும் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து 2 படைப் பிரிவை கிழக்கு லடாக் பகுதிக்கு வரவழைத்துள்ளது. கிழக்கு லடாக் கில் ஆண்டுதோறும் போர் ஒத்திகை நடத்தும் மலை படைப்பிரிவும் வரழைக்கப்பட்டுள்ளது.

பீரங்கிகள், தரைப்படை போர் வாகனங்கள் உள்ளிட்ட தளவாடங் களை எல்லையில் இந்திய விமானப்படை இறக்கியுள்ளது. இதுதவிர தவ்லத் பேக் ஓல்டி பகுதி யில் கவச வாகன போர் வாகனப் பிரிவும் ஏற்கெனவே முகாம் அமைத்துள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு நெடுகிலும் சீனாவின் அத்துமீறலை திரிசூல் காலாட்படை பிரிவு மேற் கொள்கிறது. சீனாவின் ஆக்கிர மிப்பு, படைகள் குவிப்பு காரண மாக காரகோரம் கணவாய் பகுதி யிலும் கல்வான் பள்ளத்தாக்கில் தவ்லத் பேக் ஓல்டி பகுதியிலும் மேலும் ஒரு படைப்பிரிவை நிறுத்த இந்திய ராணுவம் பரிசீலித்து வருகிறது. எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முப்படைகளும் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பான்கோங் ஏரி பகுதிக்கு கடந்த மே 18 மற்றும் 19-ம் தேதிகளில் சுமார் 2,500 வீரர்களை கொண்ட படைகளை அனுப்பியது சீனா. ஆனால் அதற்கு மாறாக ஏரிக் கரையையொட்டி சுமார் 200 வீரர் களை மட்டுமே இந்தியா நிறுத்தியுள் ளது. அதேநேரம், இந்த இடத் துக்கு அப்பால் ரோந்து செல் வதற்கு இந்திய வீரர்களை சீனா அனுமதிப்பதில்லை. இரு நாடு களும் தொடர்ந்து படைகளை குவித்து வருவதால் எல்லையில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இப்போதைய நெருக்கடிக்கு தீர்வுகாண ராணுவ நிலையிலும் தூதரக நிலையிலும் இருதரப்பும் பேச்சு நடத்தினாலும் உடனடி பலன் கிடைக்காது என்ப தால் நீண்ட தாமதம் ஆனாலும் அதுவரை எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது இந்திய ராணு வம். எல்லையில் பனிப்பொழிவு தொடங்கும் காலமான செப்டம்பர் முதல் அக்டோபர் வரை வீரர்களை குவிக்கும் பணி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு தடை

ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீன நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மத்திய அரசு படிப்படியாக ரத்து செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, டிக் டாக், ஹலோ உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு அண்மையில் மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை திட்டங் களை செயல்படுத்த சீன நிறு வனங்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும். அதேபோல, சீன நிறுவனத்தின் பங்களிப்புடன் செயல்படும் எந்த திட்டங்களுக்கும் இனி அனுமதி வழங்கப்படாது.

பெரிய அளவிலான சாலை கட்டுமானம் மற்றும் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டங்களில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்க ஏதுவாக, விதிமுறைகளில் தளர்வு செய்யப்படும். இதுதொடர்பான பணிகளை உடனடியாக மேற் கொள்ளுமாறு நெடுஞ்சாலைத் துறை செயலருக்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை அமைப்பின் தலைவருக்கும் உத்தர விட்டுள்ளேன்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்வது முழுமையாக தடை செய்யப்படும். அதேநேரத் தில், மற்ற வெளிநாட்டு நிறுவனங் களின் முதலீடு ஊக்குவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x