இந்தியாவில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை: நிதின் கட்கரி திட்டவட்டம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி : கோப்புப்படம்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி : கோப்புப்படம்
Updated on
2 min read

இந்தியாவில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களோடு கூட்டாகச் சேர்ந்து பங்கேற்பதை அனுமதிக்கமாட்டோம் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாகத் தெரிவித்தார்

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்தியா, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலிலல் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அந்த சம்பவத்துக்குப்பின் இந்தியாவில் சீனாவுக்கு எதிரான மனநிலை மக்கள் மனதில் எழுந்து வருகிறது. சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷமும் வலுத்து வருகிறது.

மேலும், மத்திய அமைச்சர்கள் சிலரும் வெளிப்படையாகவே சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று முழுக்கமிட்டுள்ளனர்.

பிஎஸ்என்எல் நிறுவனமும் 4ஜி தொழில்நுட்பத்துக்கு சீனப் பொருட்களையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ரயில்வே அமைச்சகமும் சமீபத்தில் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

மகாராஷ்டிரா அரசு சீன நிறுவனங்களுடன் ரூ.5 ஆயிரம் கோடியில் செய்திருந்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. சீனாவிலிருந்து 500 வகையான பொருட்கள் இந்தியாவில் புழக்கத்தில் இருக்கின்றன அவற்றை தடை செய்ய வேண்டும் என இந்திய வர்த்தகக் கூட்டமைப்பான சிஏஐடி கோரிக்கை விடுத்துள்ளது.

பிஹார் மாநில அரசும் கடந்த இருநாட்களுக்கு முன் பாட்னா நகரில் ரூ.2900 கோடியில் கட்டப்பட இருந்த பாலம் தொடர்பான ஒப்பந்தம் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்ததால், அதை ரத்து செய்து அறிவித்தது.

மேலும், உள்நாட்டு பாதுகாப்பு, மக்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு பாதுகாப்பின்மை ஆகிய காரணங்களால் சீனாவின் 59 செல்போன் செயலிகளையும் இந்தியாவில் பயன்படுத்தத் தடை விதித்து மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதனால் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு தீவிரமைடந்து வருகிறது.

இந்த சூழலில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

இந்தியாவில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் நேரடியாகவோ, அல்லது இந்திய நிறுவனங்களுடன் கூட்டாகச் சேர்ந்து பங்கேற்பதையோ அனுமதிக்கமாட்டோம். இந்த முடிவில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. அதேபோல குறு, சிறு, நடுத்த நிறுவனங்களிலும் சீன முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதையும் அரசு ஆதரிக்காது.

நெடுஞ்சாலைத் திட்ட ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதற்கான கொள்கை விரைவில் வெளியிடப்படும், அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு நிறுவனங்கள் அதிகமான அளவில் பங்கேற்பதற்காக விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அவற்றின் பங்களிப்பு அதிகப்படுத்தப்படும்.

தற்போது சில திட்டங்களில் மட்டும் சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த புதிய முடிவு இப்போதுள்ள திட்டங்களுக்கும், எதிர்காலத் திட்டங்களுக்கும் பொருந்தும். ஏதேனும் சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து கூட்டாக ஒப்பந்தத்தில் இருந்தால் அவை ரத்து செய்யப்பட்டு புதிதாக டெண்டர் கோரப்படும்.

நம்முடைய இந்திய நிறுவனங்கள் பங்கேற்பை அதிகப்படுத்தும் வகையில் பெரிய திட்டங்களில் அவற்றின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் முடிவு எடுத்திருக்கிறம். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை செயலாளர், தேசியநெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் தலைவர் ஆகியோருடன் ஆலோசனை நடத்திேனன். தகுதியான இந்திய நிறுவனங்கள் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக விதிமுறைகளை எளிதாக்க உத்தரவிட்டுள்ளேன்.

சிறிய திட்டங்களை எடுத்து செய்வதற்கு ஒரு இந்திய ஒப்பந்ததாரருக்கு தகுதியிருந்தால், அவர் பெரிய திட்டங்களையும் எடுத்து செய்வதற்கு தகுதியானவர். கட்டுமானத் திட்டங்களுக்கான விதிமுறைகளையும் மாற்ற உத்தரவிட்டுள்ளேன். இந்தியநிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும்.

தொழில்நுட்பம், ஆலோசனை, வடிவமைப்பு போன்றவற்றில் வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்த விரும்பினால் அனுமதிக்கப்படும். ஆனால், அதில் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும்,வெளிநாட்டு முதலீடும் வரவேற்கப்படும். ஆனால், சீன முதலீட்டாளர்கள் இந்த துறையில்

அனுமதிக்கப்படமாட்டார்கள்.சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது குறைக்கப்படும், இந்தியாவிலேயே உற்பத்தி செய்து தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகர முன்னுரிமை அளிக்கப்படும்.

எல்லைப் பிரச்சனை உருவாகுவதற்கு முன் சீனாவிலிருந்து இந்தியத் துறைமுகத்துக்குவந்துள்ள கண்டெய்னர்கள் போன்றவற்றுக்கு எந்த சிக்கலும் இருக்காது. அவை நிலுவையில் இருந்தால் விரைவில் உரியவர்களிடம் அனுப்பி வைக்கப்படும். அதற்கு தேவையான ஏற்படுகளச் செய்யும்வகையில் நிதியமைச்சருக்கும், வர்த்தகத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்

இந்திய வர்த்தகம் வலிமையானது,வளர்ச்சி அடைய திறனுள்ளது. தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நமது பயணம் தொடரும். பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா சிறப்புடன், சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சீரத்திருத்தங்கள் நிச்சயம் இந்திய வர்த்தகத்துக்கும், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும்

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in