

டிக்டாக், ஷேர்இட் உள்ளிட்ட சீனாவின் 59 செல்போன் செயலிகளையும் தகவல்தொழில்நுட்பச்சட்டத்தின் கீழ் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அனைத்து இணைய சேவை நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சறுத்தலாக இருப்பதாகக் கூறி ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நேற்றுத் தடை விதித்தது. இந்தத் தடையில் புகழ்பெற்ற டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இடம் பெற்றிருந்தன
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். பிளாட்பார்ம்களில் மொபைல் செயலிகள் பயனர்களின் தகவல்களை திருடி வெளிநாடுகளில் இருக்கும் சர்வர்களுக்கு விற்பகப்படுவதாக மத்திய அ ரசுக்கு புகார்கள் வந்ததையடுத்து, இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்த 59 செயலிகளில் புகழ்பெற்ற வீசாட், பிகோ லைவ், ஹெலோ, லைக்கி, கேம்ஸ்கேனர், டிக்டாக், ஷேர்இட், யுசிபிரவுசர்,விகோ வீடியோ, எம்ஐ வீடியோ கால், கிளாஸ் ஆப் கிங்ஸ், கிளப் பேக்டரி உள்ளிட்ட பல்வேறு செயலிகள் அடங்கும்.
இந்நிலையில் சீனாவின் இந்த 59 செல்போன் செயலிகளையும் உடனடியாக தடை செய்யக்கோரி இணைய சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு இரு பிரிவுகளாக அளிக்கப்பட்டுள்ளது. முதல் உத்தரவில் சீனாவின் 35 செயலிகள் பட்டியல் அளிக்கப்பட்டு தடை செய்யவும், 2-வது உத்தரவில் 24 செயலிகள் பட்டியல் அளிக்கப்பட்டுதடை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இதுகுறித்து தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ சீனாவின் 59 செயலிகளையும் உடனடியாகத் தடை செய்யச் சொல்லி அனைத்து இணைய சேவைதாரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெப் லிங்க், ஐபி அட்ரஸ் ஆகியவையும் அனுப்பிவைக்கப்பட்டு எளிதாக முடக்கும் வகையில் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000ன் கீழ் அவசரப்பிரிவு 69ஏவின் கீழ் முதலில் 24 செயலிகளும், அடுத்ததாக 35 செயலிகளும் தடை செய்யக்கோரி இரு உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்