

'மோடி அரசு படுதோல்வி அடைந்துவிட்டது; தேர்தலில் மோடி முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவரது வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் எழுதப்பட்டவை' என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
டெல்லியில், இன்று (செவ்வாய்க்கிழமை) அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சோனியா, "மோடி அரசு படுதோல்வி அடைந்துவிட்டது; தேர்தலில் மோடி முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவரது வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் எழுதப்பட்டவை.
மோடி அரசு ஊடகங்களில் பேசப்படுகிறது ஆனால் சாதனைகளுக்காக அல்ல. பொருளாதாரம் தொடர்ந்து அதளபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. விலைவாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நிலச் சட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் என்று விடாப்பிடியாக நின்ற பாஜக அரசு தற்போது பின் வாங்கியுள்ளது. யதார்த்த நிலை அறியாமல் மோடி அரசு ஆட்சி செலுத்தி வருகிறது.
நிலச் சட்டத்தை அரசு திரும்பப் பெற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்" என்றார் சோனியா காந்தி.