

முக கவசம் அணிய வலியுறுத்திய சக பெண் ஊழியரை தாக்கியது தொடர்பாக ஆந்திர சுற்றுலாத் துறை துணை மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் சுற்றுலாத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு துணை மேலாளராக பணியாற்றும் பாஸ்கர் என்பவரிடம் அதே அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் கடந்த 27-ம் தேதி முக கவசம் அணிந்து அலுவலகம் வருமாறு வலியுறுத்தியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், பெண் ஊழியரை அடித்து கீழே தள்ளி அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பெண் ஊழியர் அளித்த புகாரின் பேரில் நெல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அச்சம்பவம் பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் துணை மேலாளர் பாஸ்கரை சஸ்பெண்ட் செய்து மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் அவந்தி நிவாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அமைச்சரின் உத்தரவின் பேரில் சுற்றுலாத் துறை நிர்வாக மேலாளர் பிரவீன் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.