

கர்நாடகாவில் நேற்றைய நிலவரப்படி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,295-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 230 ஆக உள்ளது.
பெல்லாரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 12 பேர்கரோனாவுக்கு பலியாகினர். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாக ஊழியர்கள் பெல்லாரி மாநகராட்சி அதிகாரிகளின் அனுமதியின் பேரில், அந்த உடல்களை பெல்லாரி தொழிற்பேட்டையில் அடக்கம் செய்ய முடிவெடுத்தனர். இதன்படி, அனைவரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது. இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால், கர்நாடகாவை ஆளும் பாஜக அரசும், அதன் நிர்வாக அமைப்பும் இந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டுள்ளன” என அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு கூறியதாவது: இந்த சம்பவத்தில் விதிமீறல் நடந்திருந்தால் அதில் தொடர்புடைய அனைவருக்கும் உடனடியாக சம்மன் அனுப்பப்படும். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். முதல் கட்டமாக, பெல்லாரி மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து விளக்கம் கோரியுள்ளேன். கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.