

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் பிடிபட்டார்.
விசாரணைக்கு பின்னர், 2012-ம் ஆண்டு அவர் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள முக்கியப் பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும், மும்பை கடற்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மும்பையில் செயல்படும் 2 தாஜ் ஹோட்டல்களுக்கு நேற்று மதியம் 12.30 மணிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை பாகிஸ்தானின் லஷ்கர் அமைப்பின் தீவிரவாதி எனக் கூறியுள்ளார். பின்னர், “கடந்த 2008-ம் ஆண்டு தாஜ் ஹோட்டலில் நிகழ்த்தப்பட்டதைப் போல பயங்கர தாக்குதல் விரைவில் நடைபெறும்” எனக் கூறி அவர் தொடர்பை துண்டித்து விட்டார்.
இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் மும்பை போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில், அங்குள்ள தாஜ் ஹோட்டல்களில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, நகரில் உள்ள மற்ற முக்கிய இடங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மிரட்டல் அழைப்பு எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.