

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன சைக்கிள் பேரணி நடைபெற்றது. அதில் கர்நாடகக் காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா கண்டன சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்தார். விதானசவுதா வழியாக அனந்த்ராவ் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலை வரை நடைபெற்ற இந்தப் பேரணியில் கர்நாடக மாநிலக் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் பெங்களூரு மேயர் சம்பத் ராஜ் உட்பட 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து டி.கே.சிவகுமார் பேசுகையில், ''சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாகக் குறைந்துள்ளது. ஆனாலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு, பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தி வருகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைக் காட்டிலும், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால், மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
ஏற்கெனவே கரோனா தொற்றின் காரணமாக மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், பெட்ரோல் விலை உயர்வு மக்களை மேலும் சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவேண்டும். இல்லாவிடில் காங்கிரஸ் தேசிய அளவில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும். கர்நாடகாவில் அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் ஜூலை 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையில் கண்டன சைக்கிள் பேரணி நடத்தப்படும்’’என்றார்.
கரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் இதில் பங்கேற்றவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். அதேவேளையில் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே உரிய இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், ஊரடங்கு விதிமுறையை மீறினர்.