

அம்பேத்கரிய இயக்க முன்னோடியும், இந்திய குடியரசுக் கட்சியின் கர்நாடக மாநிலப் பொருளாளருமான பி.பாலகிருஷ்ணன் (86) நேற்று இரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் பெங்களூருவில் இன்று தகனம் செய்யப்பட்டது.
வேலூரைச் சேர்ந்த பி.பாலகிருஷ்ணன் மாணவப் பருவத்திலே பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, அவரது 'ஷெட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன்' அமைப்பில் இணைந்தார். நாடகம், மக்கள் இசைப் பாடல்கள் வாயிலாக அம்பேத்கரியக் கருத்தியலை வேலூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் பரப்பினார். தொடர் அரசியல் ஈடுபாட்டின் காரணமாக அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோரை நேரில் பார்க்கும் வாய்ப்பையும் பெற்றார்.
பெங்களூரு போக்குவரத்துக் கழகத்தில் வேலை கிடைத்ததும் பெங்களூருவில் நிரந்தமாகக் குடியேறினார். அப்போது அம்பேத்கரின் இந்தியக் குடியரசுக் கட்சியில் இணைந்து, பெங்களூரு கன்டோன்மென்ட், கோலார் தங்கவயல் உள்ளிட்ட பகுதிகளில் கட்சிப் பணியில் ஈடுபட்டார். மேலும் பெங்களூரு போக்குவரத்துக் கழகத்தில் அம்பேத்கர் பெயரில் தொழிற்சங்கத்தை உருவாக்கி அதிலும் தீவிரமாக ஈடுபட்டார். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, ஒடுக்கப்பட்டோருக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார்.
இந்தியக் குடியரசுக் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பாலகிருஷ்ணன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் கர்நாடக மாநிலப் பொருளாளராக இருந்தார். தந்தை சிவராஜ், ஆர்.எஸ்.கவாய், பள்ளிகொண்டா தளபதி கிருஷ்ணசாமி, பசவலிங்கப்பா, எம்.ஏ.அமலோற்பவம், சி.எம்.ஆறுமுகம் உள்ளிட்ட ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும், அம்பேத்கரிய இயக்கச் செயல்பாட்டில் ஆர்வமுடன் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள அம்பேத்கர் சாலையில் தன் குடும்பத்தினருடன் வசித்த பி.பாலகிருஷ்ணன் நேற்று இரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணனின் உடலுக்கு இந்தியக் குடியரசு கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் கோவிந்தராஜ், துணை பொதுச் செயலாளர் தனபால், நிர்வாகிகள் வேளாங்கண்ணி, பிரபு ராஜேந்திரன் உள்ளிட்டோர் நீலக்கொடி போர்த்தி, அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்று மாலை கல்பள்ளி சுடுகாட்டில் பவுத்த முறைப்படி பஞ்சசீலம் வாசிக்கப்பட்டு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
மூத்த அம்பேத்கரிய செயல்பாட்டாளரான பி.பாலகிருஷ்ணனின் மறைவுக்கு இந்திய குடியரசுக் கட்சியின் தேசியத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், தேசிய பொதுச் செயலாளர் ராஜேந்திர கவாய், தென்னிந்திய பவுத்த சங்கத்தின் ஆலோசகர் துரை ராஜேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.