லடாக்கிலிருந்து சீன ராணுவத்தை எப்போது, எப்படி அகற்றப்போகிறீர்கள்? பிரமதர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
2 min read


கிழக்கு லடாக்கில் இந்தியப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள சீன ராணுவத்தை எப்போது, எப்படி அகற்றப் போகிறது மத்திய அரசு என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் கடந்த 15-ம் தேதி இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்குப்பின் மத்திய அரசை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.

இந்தியப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள சீனாவுக்கு தகுந்த பதிலடி தர மத்திய அரசு தவறிவிட்டது. சீனாவிடம் மோடி சரணடைந்துவிட்டார் என்று காட்டமாக ராகுல் காந்தி விமர்சித்தார்.

அதுமட்டுமல்லாமல் இன்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த ராகுல் காந்தி, “ புள்ளிவிவரங்கள் பொய் சொல்லாது, பாஜக கூறுவது: மேக் இன் இந்தியா, பாஜக செய்வது: சீனாவிலிருந்து வாங்குவது” என்று வரைபடம் வெளியிட்டிருந்தார்.

இந்த சூழலில் ராகுல் காந்தி எம்.பி. வீடியோ வெளியிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் நிலப்பகுதியை சீனா அபகரித்துக்கொண்டுள்ளது. இது இந்த தேசத்தின் மக்கள் அனைவருக்கும் தெரியும். லடாக்கில் 4 இடங்களில் சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளதும் அனைவருக்கும் தெரியும். லடாக்கில் உள்ள இந்தியப் பகுதியிலிருந்து சீன ராணுவத்தை எப்போது விரட்டப் போகிறார்கள், எப்படி விரட்டப்போகிறீர்கள் என்பதை மக்களுக்கு பிரதமர் மோடி கூற வேண்டும்.

கடந்த 3 மாதங்களில் இந்தியப் பொருளாதாரத்தை கரோனா வைரஸ் சீரழித்துவிட்டது. நம்முடைய பொருளாதராத்துக்கு மிகப்பெரிய இழப்பும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். கரோனா லாக்டவுனால் ஏழை மக்கள், தொழிலாளர்கள், நடுத்தரக் குடும்பத்தினர், மாதஊதியம் பெறும் குடும்பத்தினர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்

கரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் காங்கிரஸ் பரிந்துரைத்த நியாய் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 நேரடியாக வழங்க வேண்டும்.

மத்தியில் ஆளும் மோடி அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. கடந்த 7-ம் தேதி முதல் இதுவரை 22 முறை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டது.

மக்களிடம் பணத்துக்கு பற்றாக்குறை இல்லை. ரூ.3 லட்சம் கோடி கையிருப்பு இருக்கிறது. ஆதலால் உடனடியாக நியாய் போன்ற தி்ட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி, மக்களுக்கு பணத்தை வழங்கிட வேண்டும் “
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in