

நமது வீரர்கள் 20 பேரை எல்லையில் சீன ராணுவம் கொலை செய்த நிலையில் அந்நாட்டு நிறுவனங்கள் பி.எம்.கேர்ஸ் நிதிக்கு அளித்த நன்கொடைகளை மத்திய அரசு திருப்பி அளிக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக மத்திய அரசு பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளையை உருவாக்கியது. இந்த அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் மோடியும், உறுப்பினர்களாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் உள்ளார்கள்.
இந்த பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளையில் எதிர்க்கட்சிகளையும், நடுநிலையாளர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டுள்ளது.
இதற்கிடையே கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உள்நாட்டில் சீனாவுக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சீனப் பொருட்களைப் புறகணிக்க வேண்டும் என்ற கோஷம் வலுத்து வருகிறது.
இதற்கிடையே சீன நிறுவனங்களால் முதலீடு பெறப்பட்ட இந்திய நிறுவனங்கள் பிஎம் கேர்சுக்கு உதவி அளித்துள்ளன. ஹாவேய் ரூ.7 கோடி, ஷியோமி ரூ.15 கோடி, ஓப்போ ரூ. 1கோடி பிஎம் கேர்சுக்கு நன்கொடை அளித்துள்ளன. ரூ.100 கோடி பிஎம் கேர்சுக்கு நன்கொடை அளித்த பேடிஎம் நிறுவனத்தில் 38% சீன முதலீடு உள்ளது.
அதே போல் சீன சமூக வலைத்தள நிறுவனமான டிக் டாக் ரூ.30 கோடி பிஎம் கேர்சுக்கு நிதியளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“ கிழக்கு லடாக் எல்லையில் நமது ராணுவ வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்றுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வரும் சூழலில், சீனாவில் இருந்து மத்திய அரசு ஏதேனும் நன்கொடை பெற்றிருந்தால் அதை திருப்பித் தந்துவிட வேண்டும்.
நம்முடைய வீரர்கள் சீன வீரர்களால் கொல்லப்படும் போது, எல்லையில் அவர்கள் ஊருடுவி ஆக்கிரமிக்கும்போது, அந்த நாட்டின் நிறுவனங்கள் மூலம் வரும் பணத்தை நாம் பெறுவது நியாயமாக இருக்காது.
சீனாவைச் சேர்ந்த சில நிறுவனங்கல் பி.எம்.கேர்ஸ் நிதிக்கு ஏராளமான நன்கொடை அளித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. எவ்வளவு பணம் சீன நிறுவனங்கள் கொடுத்துள்ளன என்பது முக்கியமல்ல.
இப்போதுள்ள சூழலில் நாம் கரோனாவில் படும் துன்பத்துக்கும் சீனாதான் காரணம், 2-வதாக எல்லையில் நமது வீரர்கள் 20 பேரை இழந்து, பதற்றமான சூழலை எதிர்கொண்டதற்கும் சீனாதான் காரணம்.
ஆதலால் சீனா நிறுவனங்களிடம் இருந்து நாம் ஒரு ரூபாயைக்கூட வாஹ்கக்கூடாது, அவ்வாறு பெற்றிருந்தால் அதை திரும்பிக்கொடுத்து விட வேண்டும். சீன நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு பெரிய நன்கொடை பெற்றிருந்தாலும் அதை திருப்பிக் கொடுக்க இதுதான் சரியான நேரம். அவர்களின் பணம் இல்லாமல் நம்மால் எதையும் சமாளிக்க முடியும்.
சீனாவின் பணம் இந்தியாவுக்குத் தேவையில்லை. நம்முடைய சொந்த பணத்திலேயே நாம் அனைத்தையும் சமாளிக்கலாம் “
இவ்வாறு அமரிந்தர் சிங் தெரிவித்தார்