

இந்திய குடிமக்களுக்கும் தேசத்தின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிப்பதாக சீனாவின் டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட 59 செயலிகளுக்கு மத்திய அரசு திங்களன்று தடை விதித்து அதிரடி முடிவை அறிவித்தது.
இதில் பிரபலமான செயலியான டிக் டாக் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தடை குறித்து எதிர்வினையாற்றவும் விளக்கங்களை அளிக்க ஒரு வாய்ப்பாகவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சந்திக்க டிக் டாக் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டிக் டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், கிளாஷ் ஆஃப் கிங்ஸ், வெய்போ உள்ளிட்ட பிரபல செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டன.
இந்த செயலிகளில் டிக் டாக் மிகவும் பிரபலமான ஒரு ஆப் ஆகும். இளம் இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் டிக் டாக் கடுமையாக பிரபலமடைந்தது. இது பல வகையில் சர்ச்சையையும் கிளப்பியது, ஆங்காங்கே இதை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்து வந்தன.
செவ்வாய் காலை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்தும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்தும் டிக் டாக் நீக்கப்பட்டது. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்கள் ஆப் ஸ்டோரிலிருந்து டிக் டாக்கை நீக்கவில்லை என்றும் தாங்கள் இந்திய அரசின் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நீக்க கேட்டுக் கொண்டதாகவும் டிக் டாக் சூசகமாகத் தெரிவித்துள்ளது.
“இந்திய அரசு செயலிகளைத் தடை செய்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது, டிக் டாக் நிறுவனம் இதனடிப்படையில் அந்த உத்தரவுகளுடன் ஒத்துப் போக விரும்புகிறது.
மேலும் சம்பந்தப்பட்ட அரசுத்துறையினரை சந்தித்து விளக்கம் அளிக்க வாய்ப்பாக எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய சட்டத்தின் கீழ் தரவு தனியுரிமைப் பாதுகாப்பு, மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கிணங்கவே டிக் டாக் செயல்பட்டு வருகிறது. இந்தியப் பயனாளர்கள் பற்றிய விவரங்கள் அன்னிய அரசுக்கோ, சீன அரசுக்கோ பகிரப்படவில்லை” என்று டிக் டாக் தன் அறிக்கையில் கூறியுள்ளது.
விளக்கம் கேட்க அழைத்திருப்பது தடையை ஒருவேளை நீக்குவதற்கான சந்திப்பா அல்லது தரவுகளைப் பகிர்ந்துள்ளதா டிக் டாக் என்பதற்கான விசாரணைக்கான அழைப்பா என்பது தெரியவில்லை.