Last Updated : 30 Jun, 2020 01:56 PM

 

Published : 30 Jun 2020 01:56 PM
Last Updated : 30 Jun 2020 01:56 PM

உத்தராகண்டின் முக்கியக் கோயில் நிதிகளை பாஜக அரசு வசூலிப்பதை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தும் சாதுக்கள்

உத்தராண்ட் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அங்குள்ள முக்கியக் கோயில்களின் நிதியை வசூலிக்கத் துவங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள சாதுக்கள் தொடர் போராட்டம் துவங்கி உள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தில் இருந்து கடந்த 2000 ஆண்டில் பிரிந்த மாநிலம் உத்தராகண்ட். இங்கு இந்துக்களின் புனிதத்தலங்களாக பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற முக்கிய கோயில்கள் 51 உள்ளன.

இவைகளின் தரிசனத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள் கோடிக்கணக்கான மதிப்பில் நிதி அளிப்பது உண்டு. இவற்றின் உதவியால் கோயிலை நிர்வாகிப்பதுடன் அதில் தம் செலவுகளையும் அங்குள்ள பண்டிதர்களும், சாதுக்களும் செய்து வருகின்றனர்.

இதற்கு தடை விதிக்கும் நோக்கில் பாஜக ஆளும் உத்தராகண்ட் அரசு கடந்த பிப்ரவரியில் ஒரு சட்டம் இயற்றியது. அதில், அம்மாநிலத்தின் 51 முக்கியக் கோயில்களின் நிதிகளை அரசே கையாள்வதுடன் நிர்வாகப்பணியையும் செய்யும் எனக் கூறியது.

இதற்காக, தேவாஸ்தான் பிரபந்தன் போர்டு என ஒரு அமைப்பையும் உருவாக்கியது. இதன் உறுப்பினர்களாக அம்மாநில அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் எம்எல்ஏக்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

இதன்மூலமாக, கடந்த மே மாதம் இறுதி முதல் மீண்டும் திறக்கப்பட்ட கோயில்களின் நிதி அம்மாநில அரசு வசம் செல்லும் நிலை ஏற்பட்டது. எனினும், கரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த அமைப்பால் முழுமையாக செயல்பட முடியாமல் இருந்தது.

இந்நிலையில், பெரும் பாதிப்பிற்குள்ளான உத்தராகண்ட் மாநில சாதுக்களின் குழு முதல் அமைச்சர் திரிவேந்திரா ராவத்தை நேரில் சந்தித்து பேசியது. அப்போது அவர்களிடம் கோயில் நிதிநிலையை பழையமுறையில் மாற்றி அமைக்கப்பரிசீலனை செய்வதாக முதல்வர் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த உறுதி இன்னும் நிறைவேற்றாத காரணத்தால், உத்தராண்ட் மாநில சாதுக்கள் சார்பில் அரசு முடிவை எதிர்த்து தொடர் போராட்டம் துவங்கி உள்ளது. கடந்த இருவாரங்களாக நடைபெறும் இப்போராட்டம் பாஜக அரசிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கங்கோத்ரி மந்திர் சமிதியின் துணைத்தலைவரான அருண் செம்வால் கூறும்போது, ‘எங்கள் போராட்டம் முடிக்கப்படவில்லை எனில் சாதுக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக மாநில அரசு மிரட்டுகிறது. கோயில் பக்தர்கள் மூலம் கிடைக்கும் காணிக்கையில் வாழும் சுமார் 1500 பண்டிதர்கள் வயிற்றில் அடிக்க அரசு முயல்கிறது.’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, கோயில் நிதி வசூல் பிரச்சனை முடிவிற்கு வரவில்லை எனில் சாகும்வரை போராட்டம் துவங்குவதாகவும் சாதுக்கள் அரசை எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக அரசு சாதுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தீவிர ஆலோசனை செய்து வருகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x