

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் பிரச்சினையை உருவாக்கிய சீனாவின் 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், சீனாவிற்குப் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பும், அதன் லாபம் இந்தியாவிற்கும் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
டிக் டாக், யூசி பிரவுசர், ஷேர்இட், கேம்ஸ்கேனர், ஹலோ, வீசாட் போன்ற சீனச் செயலிகள் இந்தியப் பொதுமக்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. எனினும், இதன் மீதான தடையால் இந்தியாவிற்கு லாபமே தவிர எந்த இழப்பும் ஏற்படாது எனக் கருதப்படுகிறது. ஏனெனில், இதற்கு இணையான செயலிகள் இந்தியாவில் இருப்பதுதான் காரணம் ஆகும். இது இந்தியாவின் ஐடி நிறுவனங்களை மேம்படுத்துவதுடன் வேலைவாய்ப்பும் பெருகும் எனக் கருதப்படுகிறது.
அதேசமயம், 59 செயலிகளின் பயன்பாடுகளில் இருந்து இந்தியா விலகுவதால் சீனாவிற்குக் கணிசமான பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் சீன செயலிகள் எண்ணிக்கை மீதான ஒரு புள்ளிவிவரம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. இதன்படி யூசி பிரவுசர் செயலியை 13 கோடி பேர், டிக் டாக் செயலியை 12 கோடி பேர், ஷேர் இட் செயலியை 4 கோடி பேர் இந்தியாவில் பயன்படுத்துகின்றனர். இதில், டிக் டாக்கின் மொத்தப் பதிவுகளில் 30 சதவிகிதம் இந்தியர்களுக்கானதாக உள்ளது. டிக் டாக் செயலியில் 2019-ம் ஆண்டின் கடைசி காலாண்டு வருமானம் மட்டும் ரூ.25 கோடியாக இருந்தது.
இந்த வகையில், 59 செயலிகள் மூலம் இந்தியர்களினால் சீனாவிற்குக் கிடைக்கும் வருமானம் பல ஆயிரம் கோடி ரூபாய். எனவே, 59 செயலிகள் தடையால் இந்தியச் சந்தையில் சீனாவின் மிகப்பெரிய வியாபாரத்திற்கு இழப்பு ஏற்படும்.
இந்தியர்கள் மீதான சீனக் கண்காணிப்புற்கும் தடை
தடைக்கு முன்பாக சீனாவின் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வோரிடம் அந்தக் குறிப்பிட்ட செயலி, பயனர்களிடம் பல அனுமதிகளைக் கேட்பது வழக்கம். இதில், நம் முகநூல் பக்கம், சேமிப்பில் உள்ள படங்கள், குறுஞ்செய்திகள் என அனைத்தும் அதில் அடக்கம். இவற்றுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் தனது செயலிகள் மூலம் சீனா இந்தியர்களைக் கண்காணிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதில், இந்திய சந்தையின் நிலவரம் அறிந்து அதற்கேற்றவாறு தனது தயாரிப்புகளை அமைக்கும் வாய்ப்பு இருந்தது.
சீனச் செயலிகளை மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினரும் பயன்படுத்துவது உண்டு. இவர்கள் தம் கணினி மற்றும் செல்போன்களில் வைத்திருக்கும் முக்கியத் தகவல்களைச் சீனா கண்காணிக்கும் வாய்ப்புகளும் அதிகம். குறிப்பாக இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டைக் காரணம் காட்டியே மத்திய அரசு, சீனாவின் 59 செயலிகளுக்கும் தடை விதித்துள்ளது. இது, இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ-ன் கீழ் அமலாக்கப்பட்டுள்ளது.
தடையைச் செயல்படுத்துவது எப்படி?
இந்தியாவில் உள்ள இணையதள சேவை மற்றும் தொலைபேசி இணைப்பு நிறுவனங்களுக்கு சீன செயலிகளின் தடையை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், அந்நிறுவனங்கள் அந்த 59 செயலிகளுக்கான சேவைகளை நிறுத்திவைக்கும்.
இதனால் அந்தச் செயலிகள் செயல்படாமல் முடக்கப்படுவதுடன், இனி அவற்றை அப்டேட் செய்ய முடியாமல் போகும். புதிதாகவும் அவை பதிவிறக்கம் செய்ய முடியாதபடி கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரிலும் 59 செயலிகள் காட்டப்படாது.
இந்தியா வரும் வெளிநாட்டவர்களுக்கும் செயலிகள் தடை?
இந்தியா வரும் வெளிநாட்டவர்களுக்கும் இந்த 59 செயலிகளின் செயல்பாடுகள் முடக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கான ஆலோசனைகளும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளன.
இங்கு சீன செயலிகளை முடக்குவதால் வெளிநாட்டவர்களும் இந்திய செயலிகளைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் உருவாகும். இதன் சிறந்த சேவைகளைப் பொறுத்து வெளிநாட்டவர்கள் இடையே இந்திய செயலிகளின் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
செயலிகளை அடுத்து கைப்பேசிகளா?
மேலும், இந்தியாவில் பயன்படுத்தப்படும் கைப்பேசிகளின் தயாரிப்புகளிலும் சீனா பெரும் இழப்பை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் சுமார் 80 கோடி செல்போன் பயனர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் சீனத் தயாரிப்புகளின் செல்போன்களைப் பயன்படுத்துகின்றனர்.
செயலிகளை அடுத்து இந்தியா, சீனாவின் செல்போன் தயாரிப்புகளிலும் கவனத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.