

ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக நடந்த தேடுதல் வேட்டையில் இரு தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
தெற்கு காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாக் மாவட்டம், வாகமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, போலீஸார், பாதுகாப்புப்படையினர், ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவினர் இன்று காலை தேடுதல் வேட்டையில் இறங்கினர்
அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்சிச் சண்டையில் இருதீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்புப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது, தேடுதல் பணியும் தொடர்ந்து நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனந்த்நாக் மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக நடக்கும் என்கவுன்ட்டர் ஆகும். இந்த மாவட்டத்தின் குல்சோஹர் பகுதியில் நேற்று பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதில் இருவர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், ஒருவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். காஷ்மீரின் தோடா மாவட்டத்தைக் கலக்கி வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத குழுவின் முக்கியத் தளபதி மசூத் நேற்றைய என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தோடா மாவட்டம் தீவிரவாதிகள் இல்லாத மாவட்டமாக போலீஸஸ் டிஜிபி தில்பாக் சிங் நேற்று அறிவித்தார். இந்த சூழலில் இன்று 2-வது நாளாக என்கவுன்ட்டரில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்
காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில் “ கடந்த 3 நாட்களுக்கு முன் பீஜ்பேஹ்ரா பகுதியில் ஒரு சிஆர்பிஎப் வீரரையும், 5 வயது சிறுவனையும் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
அந்த தீவிரவாதிகள் வாகா பகுதியில் வந்து பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, இன்று தேடுதல் வேட்டையில் இரு தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்” எனத் தெரிவித்தார்