Last Updated : 30 Jun, 2020 08:55 AM

 

Published : 30 Jun 2020 08:55 AM
Last Updated : 30 Jun 2020 08:55 AM

விசாகப்பட்டிணம் தனியார் மருந்து நிறுவனத்தில் திடீர் வாயுக் கசிவு: இருவர் உயிரிழப்பு, 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

விசாகப்பட்டிணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊழியர்கள் : படம் ஏஎன்ஐ

விசாகப்பட்டிணம்


ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் நேற்று இரவு நடந்த வாயுக் கசிவில் ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர், 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

விசாகப்பட்டணத்தில் உள்ள பர்வாடா பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டி வளாகத்தில் சைனார் லைப் சயின்ஸ் எனும் தனியார் மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்து நிறுவனத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது.

இந்த மருந்து நிறுவனத்தில் இருந்து பென்சிமிடாசோல் எனும் வாயு கசிந்துள்ளது. இந்த வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை விசாகப்பட்டிணத்தில் உள்ள ஆர்.கே. மருத்துவமனைக்கு மருந்துநிறுவனம் நிர்வாகம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளது.

இதில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர், 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது

இந்த நிறுவனத்தில் இருந்து மென்சிமிடோசோல் வாயு கசிந்துள்ளது. இந்த வாயுவின் அடர்த்தி கூடுதல் என்பதால் அதிகமான அளவுக்கு காற்றில் பரவலில்லை. மேலும், கடந்த இரு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வாயுச்கசிவான அமோனியா வாயுவைப் போல் மோசமானது இல்லை என்பதால் உயிரிழப்பு பெருமளவு தவிர்க்கப்பட்டது.

நள்ளிரவில் ஆய்வில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் : படம் ஏஎன்ஐ

இந்த சம்பவத்தையடுத்து, உடனடியாக மருந்து நிறுவனம் உற்பத்தியை நிறுத்தி, மூடப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வாயுவும் எங்கும் பரவவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றன

இது குறித்து பர்வாடா போலீஸ் ஆய்வாளர் உதய் குமார் ஏஎன்ஐ நிறுவனத்திடம் கூறுகையில் “ நிலைமை இப்போது கட்டுக்குள் இருக்கிறது. வாயுக்கசிவின் போது இருந்த இரு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர், 4 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், வாயு எங்கும் பரவில்லை. தீயணைப்பு படையினர் வந்து நிலைமை ஆய்வு செய்தனர்” எனத் தெரிவித்தார்

இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை அதிகாரிகளை அழைத்து தொலைப் பேசி மூலம் வாயுக் கசிவு குறித்து கேட்டறிந்தார்.

கடந்த இரு நாட்களுக்கு முன் குர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதில் இரு ஊழியர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரு மாதங்களுக்கு முன் விசாகப்பட்டிணத்தில் எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தில் ஸ்டைரின் வாயு கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x