

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் தளர்த்தப்படும் 2-வது கட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் கடந்த 15-ம் தேதி இந்தியா, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த பின் முதல் முறையாக பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்ற உள்ளார்
அதுமட்டுமல்லாமல், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுன் தளர்த்தும் முதல்கட்டம் இன்றுடன் முடிந்து நாளை முதல்(ஜூலை-1) 2-வது கட்டம் தொடங்குகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும், பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும் நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு மக்களுக்கு உரையாற்றுகிறார். இது குறித்து நேற்று இரவு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் அறிவிப்பில் “நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது
கரோனா லாக்டவுன் தொடங்கியதிலிருந்து மக்களிடம் 6-வது முறையாக பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். கடந்த மே 12-ம் தேதி மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய போது, பிரதமர் மோடி, எல்லையில் அத்துமீறும் படைகளுக்கு தகுந்த பதிலடியை இந்திய ராணுவம் அளித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
அதுமட்டுல்லாமல், லாக்டவுன் நடவடிக்கை தளர்த்தப்பட்டு, பொருளாதார சுழற்ச்சிக்கு முழு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, சமூகவிலகலைக் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
முதல்முறையாக மார்ச் 19-ம் தேதி மக்களுக்கு உரையாற்றிய போது மக்கள் ஊரடைங்கை மார்ச் 22-ம் தேதிஅறிவித்தார்
மார்ச் 24-ம் தேதி மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 21 நாட்கள் லாக்டவுனையும், ஏப்ரல் 14-ம் தேதி பேசிய மோடி, மே 3-ம் தேதிவரை லாக்டவுனை நீட்டித்தார்.
இதற்கிடையே ஏப்ரல் 3-ம் தேதி வீடியோவில் உரையாற்றிய மோடி, கரோனா போர் வீரர்களுக்காக வீடுகளில் விளக்கை அனைத்து ஏப்ரல் 5-ம் தேதி தீபம் ஏற்ற வேண்டும் என்று தெரிவித்தார் அதன்பின் லாக்டவுனை மே 17-ம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்தது குறிப்பிடத்தக்கது