Published : 30 Jun 2020 06:43 AM
Last Updated : 30 Jun 2020 06:43 AM

செய்தித்தாள்களின் ‘பிடிஎப்’ பக்கங்களை வலைதளங்களில் வெளியிடுவது சட்டவிரோதம்: பதிப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது

புதுடெல்லி

ஆன்லைன் இ-பேப்பர் பக்கங்களை ‘பிடிஎப்’ எடுத்து வாட்ஸ் அப் போன்ற மெசேஜ் ஆப்களில் பரப்பி வருவது சட்டவிரோதம். இது பதிப்புரிமை சட்டத்துக்கு எதிரானது என்பதால், ‘குரூப் அட்மின்’ அல்லது தனிநபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் முதல் முறையாக ஊரடங்கு அமலுக்கு வந்தது. கால அவகாசம் இல்லாமல் திடீரென ஊரடங்கு அமலுக்கு வந்ததால், பல பிரச்சினைகள் உருவாயின. அவற்றில் பதிப்புரிமைகளை மீறி வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாவதும் ஒரு பிரச்சினை.

ஊரடங்கால் வேலை மற்றும் வருவாய் ஆகிய 2 வழிகளிலும் பல நிறுவனங்கள் பிரச்சினைக்கு உள்ளாயின. அவற்றில் செய்தித்தாள் நிறுவனங்களும் தப்பவில்லை. ‘கோவிட்-19’ காய்ச்சல் பரவல் பயத்தின் காரணமாக செய்தித்தாள் வாங்கும் வாசகர்களில் மிகப்பெரிய எண்ணிக்கையை இந்நிறுவனங்கள் இழந்தன.

மேலும் ‘இ-பேப்பர்’ பக்கங்களை வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவது குறித்து தேசிய நாளிதழ் ஒன்று சமீபத்தில் கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தது. அதில், ‘‘இ-பேப்பர்களை ‘பிடிஎப்’ வடிவத்தில் எடுத்து அவற்றை மெசேஜிங் ஆப்களில் வெளியிடுவது சட்டவிரோதம். அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமல் இதுபோல் மற்ற இ-பேப்பர் பக்கங்களை ‘பிடிஎப்’ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டால், அதற்கான பொறுப்பு ‘குரூப் அட்மின்’கள் அல்லது தனிநபர்களையே சேரும்’’ என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அப்படி இ-பேப்பர்களை சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு பெரும் அபராத தொகை விதிக்க செய்தித் தாள் நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என்றும் அந்தக் கட்டுரை சுட்டிக் காட்டியிருந்தது.

இ-பேப்பர்களை பெருமளவு வாட்ஸ் அப் போன்ற மெசேஜிங் ஆப்களில் வெளியிடுவது சட்டவிரோதம். பதிப்புரிமைகளை மீறிய செயல் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

ஒப்பந்தம்

செய்தித்தாள் இணையதளங்களை மொபைல் ஆப்களில் பயன்படுத்தும் போது, அவற்றுடனான ஒப்பந்தம் உள்ளது. இது சட்டப்பூர்வமானது. பயனாளர் ஒருவர், செய்தித்தாள் இணையதளத்துக்குள் செல்லும்போது அல்லது அதை பயன்படுத்தும் போது, ‘ஐ அக்சப்ட்’ (நான் ஒப்புக்கொள்கிறேன்)என்பதை கிளிக் செய்வதன் மூலம் அந்த இணையதளத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர் ஆகிறார். அச்சு ஊடகங்களுக்கும் இதேபோல் பதிப்புரிமை உள்ளது. குறிப்பாக இ-பேப்பர்களை ‘பிடிஎப்’ எடுத்து சுற்றுக்கு விடுவதற்கு தடை உள்ளது.

ஒரு ஆங்கில நாளிதழ், ‘‘இ-பேப்பர் செய்திகளை நீங்கள் நகல் எடுக்க கூடாது, மறு ஆக்கம் செய்ய கூடாது, மறுமுறை பதிப்பிக்க கூடாது, பதிவிறக்கம் செய்ய கூடாது, யாருக்கும் அனுப்ப கூடாது, ஒளிபரப்ப கூடாது...’’ போன்ற பல விதிமுறைகளை வழங்கி உள்ளது. இவற்றை மீறி செய்திகளை ஆப்களில் வெளியிட்டால் அது சட்டவிரோதமாகும்.

இதுதொடர்பான வழக்கில், பிரபல செய்தித்தாள்களின் செய்திகளை சட்டவிரோதமாக வெளியிட்டு வந்த சில இணையதளங்கள் மற்றும் ஆப்களை முடக்க டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி உத்தரவிட்டது.

சட்டரீதியாக நடவடிக்கை

அனுமதி இல்லாமல் ஒரு நிறுவனத்தின் செய்திகளை வெளியிடுவது குற்றம். இதற்கான சட்டங்கள் இருந்தாலும், இந்தப் பிரச்சினை தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இதுபோன்ற பல சிக்கல்கள் மின்னணு தொழில்நுட்பத்தில் இருப்பதால், செய்தித்தாள் நிறுவனங்கள் பதிப்புரிமை விதிகள், செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வாட்ஸ் அப் போன்ற மெசேஜிங் ஆப்களில் செய்திகள் பரவலாக வெளியாவதைத் தடுப்பதற்கான சட்ட வியூகங்கள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை காண வேண்டிய கட்டாயத்தில் செய்தித்தாள் நிறுவனங்கள் உள்ளன. எனினும், தற்போதைக்கு இ-பேப்பர் நகல்களை பிடிஎப் வடிவில் மெசேஜிங் ஆப்களில் வெளியிட்டால், சம்பந்தப்பட்ட குரூப் அட்மின்கள் அல்லது தனிநபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அல்லது கணிசமான தொகை அபராதம் கோர முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x