Published : 30 Jun 2020 06:42 AM
Last Updated : 30 Jun 2020 06:42 AM

வடகிழக்கு, லடாக் நிலைகள் சீனாவிடம் வீழ்ந்தன; லாங்ஜுவில் எதிரிகள்: கல்வானில் பின்னடைவு

புதுடெல்லி, அக்.24

நமது சிறப்பு நிருபர்

வடகிழக்கு பிராந்தியத்தின் 4 முனைகளிலும் சீனா மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருகிறது. பவுத்த மடாலய நகரான தவாங் மீது வடக்கு மற்றும் மேற்கில் இருந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. வடகிழக்கின் கின்சேமனே-லும்பு பகுதியில் சீன படைகள் பெரும் பலத்துடன் முன்னேறி வருகின்றன. சீன படைகள் லும்புவில் நுழைந்துள்ளன. அந்த நகரம் சீனாவிடம் வீழ்ந்துள்ளது. மடாலய நகரான தவாங்கில் இருந்து 10 அல்லது 12 மைல் தொலைவில் லும்பு நகரம் அமைந்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் லாங்ஜு பகுதியில் சீன வீரர்கள் நுழைந்துள்ளனர். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கின் இந்திய நிலையை சீன வீரர்கள் கைப்பற்றியதாகத் தெரிகிறது. கடந்த 4 நாட்களாக அங்குள்ள இந்திய படை வீரர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

வடகிழக்கில் சீன படை இருமுனை தாக்குதலை நடத்தி வருகிறது. டோலா நிலையின் வடக்குப் பகுதி, லும்பு பகுதியில் இருந்து சீன வீரர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் இந்திய ராணுவ நிலைகள் கைவிடப்பட்டுள்ளன. உண்மையை சொல்வதென்றால் அப்பகுதியின் நிலைமை கவலை அளிக்கிறது. சீன வீரர்கள் மிகப்பெரிய அளவில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். பூகோளரீதியாக தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவான பகுதியில் அவர்கள் முகாமிட்டுள்ளனர்.

பும்லாவில் உள்ள இந்திய நிலையை குறிவைத்து சீனா தாக்குதல் நடத்தியது. அங்குள்ள நமது வீரர்கள் தீரமாகப் போரிட்டனர். எனினும், சீன வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அந்த இடத்தை சீனா எளிதாக கைப்பற்றியுள்ளது.

கிபிது நிலை வீழ்ந்தது

மியான்மரை ஒட்டியுள்ள கிபிதுவில் உள்ள இந்திய நிலையை குறிவைத்து 1962 அக்டோபர் 22-ம் தேதி அதிகாலை முதல் சீன வீரர்கள் பல மணி நேரம் தாக்குதல் நடத்தினர். மிகப்பெரிய சண்டைக்குப் பிறகு அங்குள்ள இந்திய நிலை, சீனாவிடம் வீழ்ந்தது.

சுபன்சாரி பகுதியில் உள்ள ஆஷாபிலாவில் உள்ள இந்திய நிலை மீது சீனா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பீரங்கிகள், தானியங்கி ஆயுதங்கள் மூலம் சீன வீரர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். அப்பகுதியில் இந்திய படைகள் பின்வாங்கியுள்ளன. ஆனால் சீனத் தரப்பில் மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. லாங்ஜு நகரில் இருந்து தென்மேற்கில் 25 மைல் தொலைவில் ஆஷாபிலா உள்ளது.

லடாக் பகுதியின் கல்வான் பள்ளத்தாக்கு, பான்கோங் ஏரிக்கு நடுவே அமைந்துள்ள சாங்சென்மோ பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஓர் இந்திய நிலை சீனாவின் வசமாகி உள்ளது. பீரங்கிகள், தானியங்கி ஆயுதங்கள் மூலம் சீன ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. எனினும் நமது வீரர்கள் தீரமாக போரிட்டு வருவதால் சீன படைகளால் முன்னேற முடியவில்லை.

நம்கா சூ நதியை தாண்டி தாக்லா மலைமுகட்டில் சீன வீரர்கள் முன்னேறி வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி சில மைல் தொலைவு மட்டுமே அவர்கள் முன்னேறி உள்ளனர். இந்திய வீரர்களின் தடையை உடைக்க முடியாமல் சீனர்கள் தடுமாறுகின்றனர். கடந்த 6 நாட்களாக சீன வீரர்கள் மிகப்பெரிய தாக்குதலை நடத்திய போதும் அவர்களால் 8 மைல் தொலைவு மட்டுமே முன்னேற முடிந்துள்ளது.

நமது வீரர்கள் தீரமாகப் போரிட்டு வருகின்றனர். சண்டை நடைபெறும் பகுதிகளுக்கு புதிய படைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. எதிரி படையில் மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

(கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா - சீனா போரின் போது, என்ன நடந்தது என்பது குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் தமிழாக்கம் இது.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x