திலகம், வளையல் அணிய மனைவி மறுப்பு: கணவரின் கோரிக்கையை ஏற்று விவாகரத்து

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

அசாமில் கடந்த 2012-ம் ஆண்டு திருமணமான ஒரு தம்பதி ஓராண்டில் பிரிந்தனர். கணவரின் வீட்டைவிட்டு 2013-ல் வெளியேறிய மனைவி, கணவர் வீட்டார் தன்னை கொடுமைப்படுத்தியதாக புகார்அளித்தார். இந்தப் புகாரில் இருந்து கணவரையும் அவர் குடும்பத்தாரையும் உயர் நீதிமன்றம் விடுவித்தது.

எனினும், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் கணவர் மனுதாக்கல் செய்தார். அதில், ‘‘கூட்டுக் குடும்பத்தை விட்டு தனிக்குடித்தனம் போக மனைவி வற்புறுத்தினார். அதற்கு இணங்காததால் தாம்பத்ய உறவு பாதிக்கப்பட்டு குழந்தைகள் இல்லை. அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டைஏற்பட்டது. இதனால் நான் துன்புற்றேன்’’ என்று கூறியிருந்தார். இதை குடும்பநல நீதிமன்றம் ஏற்காமல் மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கணவரும் அவரது வீட்டாரும் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக மனைவி கூறிய புகார் நிரூபிக்கப்படவில்லை. இந்து திருமண முறையில் முக்கியமாக கருதப்படும் நெற்றித் திலகத்தையும் வளையலையும் அணிய மறுக்கிறார் என்று கணவர் கூறிய குற்றச்சாட்டைமனைவி மறுக்கவில்லை. திலகத்தையும் வளையலையும் பெண் அணிய மறுப்பது கணவருடனான திருமணத்தை ஏற்கவில்லை என்பதைக் குறிக்கிறது.

கணவர் மற்றும் அவர் வீட்டார் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதும் கொடுமைப்படுத்துவதற்கு ஒப்பாகும். அதேநேரம், விருப்பமில்லாத மனைவியுடன் சேர்ந்து வாழச் சொல்வதும் துன்புறுத்துவது போன்றதாகும். எனவே இந்த வழக்கில் விவாகரத்து வழங்கப்படுகிறது.

இவ்வாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in