உங்கள் கலாச்சாரம் கொள்ளையடிப்பது, மோடிஜியின் திட்டம் ஏழைகளுக்கு செலவழிப்பது: சோனியா விமர்சனத்துக்கு பாஜக பதிலடி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். | ஏ.என்.ஐ.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். | ஏ.என்.ஐ.
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது மத்திய அரசு, இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார்.

“மக்களிடம் மிரட்டிப் பணம் பறித்தலுக்கு உதாரணமாக பெட்ரோல், டீசல் விலையை நியாயமற்ற வகையில் உயர்த்துகிறது மத்திய அரசு. இது நேர்மையற்றது மட்டுமல்ல, உணர்வற்றதும்கூட. இந்த விலை உயர்வால் நாட்டில் உள்ள விவசாயிகள், ஏழைகள், உழைக்கும் மக்கள், நடுத்தர குடும்பத்தினர், சிறு வியாபாரிகள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்” என்று சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

இந்த விமர்சனத்துக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் கஜானாவை நிரப்புகிறது மத்திய அரசு என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்ட்ரா, ஜார்கண்ட், ஏன் புதுச்சேரியில் கூட ரூ.5 வரி அமல்படுத்தி மக்களிடம் வசூலிக்கவே செய்கின்றன. இது சோனியா காந்திக்கு தெரியாது போலும்.

நம் நாட்டில் வளர்ச்சி, சுகாதாரம், ஆகியவற்றுக்கு செலவழிக்க பணம் வேண்டுமெனில் வரி உயர்வின் மூலம்தான் செய்ய முடியும். இந்த பணம் மாநில அரசுகளுக்குத்தான் செல்கிறது. பிரதமர் கரீப் கல்யாண் யோஜனாத் திட்டம் நடைமுறையில் உள்ளது. உணவு தானியங்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் வங்கிக் கணக்குகளுக்கு ரொக்கம் செல்கிறது. எனவே கஜானாவை நிரப்புவது நோக்கமல்ல. மோடிஜியின் திட்டம் கஜானாவை நிரப்புவதல்ல, பணத்தை விநியோகிப்பது.

கோவிட்-19 காலக்கட்டத்தில் 42 கோடி மக்களுக்கு ரூ.65,454 கோடி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இன்றி இந்தப் பணம் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது. மோடிஜி ஏழைகளுக்கு அளிக்கிறார், ஆனால் நீங்கள் உங்கள் மருமகன் கணக்குக்கு அனுப்புவீர்கள். ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு அனுப்புவீர்கள். கஜானாவைக் கொள்ளையடிப்பது உங்கள் கலாச்சாரம். மோடிஜியின் திட்டம் ஏழைகளுக்கு செலவழிப்பது. தேவையுள்ள நடுத்தர மக்களுக்கு அளிப்பது.

நாங்கள் எதையும் மறைக்கத் தேவையில்லை, கரோனா நெருக்கடி காலத்தில் நாங்கள் செலவினங்களை எச்சரிக்கையுடன் மேற்கொண்டு வருகிறோம். இதனால்தான் கரோனாவைக் கையாள்வதில் இந்தியாவுக்குப் பாராட்டுக்கள் குவிகின்றன.

உலகப்பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் சவாலான காலக்கட்டத்தில் இருந்து வருகிறது. எரிசக்தித் துறையும் சவாலான காலக்கட்டத்தில் இருக்கிறது. பெட்ரோலுக்கான தேவை ஏப்ரல்-மே மாதங்களில் குறைந்து போனது. இது பொருளாதாரத்தை நேரடியாகப் பாதித்தது.

இப்போது தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. எண்ணெய் விலையை யாரும் கணிக்க முடியாது. சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை சீராகும் போது இங்கும் சீராகும்” என்றார் தர்மேந்திர பிரதான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in