‘ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்’: பாக். ராணுவ தளபதிக்கு இந்தியா பதிலடி

‘ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்’: பாக். ராணுவ தளபதிக்கு இந்தியா பதிலடி
Updated on
1 min read

போர் ஏற்பட்டால், இந்தியாவுக்கு தாங்கமுடியாத இழப்பை ஏற்படுத்துவோம் என பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீப் கூறியதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்போம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இதுதொடர்பாகக் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தானுடன் ஏதேனும் பிரச்சினை இருக்குமானால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை இந்தியாவுடன் மீண்டும் எப்படி இணைப்பது என்பதாகத்தான் இருக்கும்.

65-66 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரின் ஒருபகுதி யாகி விட்டபோதும், பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் அந்தப் பகுதி இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கட்சிகள் கண்டனம்

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாஜக செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறும்போது, “ஷெரீபின் இந்தக் கருத்து வெற்று தற்புகழ்ச்சி. பாகிஸ்தானில் நிலவும் உள்நாட்டு பிரச்சினைகள், இந்தியாவில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் அம்பலமானது ஆகியவற்றால் வெறிகொண்ட அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித்தொடர் பாளர் அபிஷேக் சிங்வி கூறும் போது, “ஷெரீபின் இந்தக் கருத்து நடைமுறைக்கு ஒவ்வாதது. உலக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவதை உறுதி செய்வதுதான் உலகத்தின் முன் தற்போதுள்ள முடிக்கப்படாத ஒரே பிரச்சினை. அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தான் தற்போது நிலைகுலைந்து போயுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

பாஜக செயலாளர் சித்தார்த் நாத் சிங் கூறும்போது, “1965-ம் ஆண்டு பாகிஸ்தான் படையெடுத்தபோது தக்க பதிலடி வாங்கியது. 1971-ம் ஆண்டு போரின்போதும், கார்கில் போரின்போதும் அசிங்கப்பட்டது. இன்னும் பாகிஸ்தானின் தளபதி பகல் கனவு காண விரும்பினால், அது பாகிஸ்தானின் அரைகுறைத் தனத்தையே காட்டும். கடந்த காலங்களில் இந்திய ராணுவம் பலமான பதிலடி கொடுத்துள்ளது. தற்போது போர் நிறுத்த உடன் பாட்டை மீறிய தாக்குதலிலும் பதிலடி கொடுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in