

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்த குரங்குக் கூட்டத்துக்குப் பாடம் புகட்டுவதற்காக ஒரு குரங்கைப் பிடித்துக் கொடுமைப்படுத்தி, மரத்தில் தூக்கிலிட்டுக் கொன்ற மனிதநேயமற்ற செயல் நடந்துள்ளது.
குரங்கின் கழுத்தில் கயிற்றைக் கட்டி அதை மரத்தில் கட்டித் தொங்கவிட்டு, துடிக்கத் துடிக்கத் தூக்கிலிட்ட சம்பவத்தை அங்கிருந்த சில இளைஞர்கள் வீடியோவாக எடுத்துப் பரப்பியுள்ளனர்.
குரங்கு துடிதுடித்து மெல்ல, தனது உயிரை விடும் காட்சியைப் பார்த்து இளைஞர்கள் ரசிக்கும் இந்த வீடியோ வைரலானதையடுத்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
கம்மம் மாவட்டம், வெம்சூர்வட்டம் அம்மாபாலம் கிராமத்தில் இந்தச் சம்பவம் கடந்த 26-ம் தேதி நடந்துள்ளது. ஆனால், வீடியோ வைரலாகி இரு நாட்களுக்குப் பின் வனத்துறைக்குத் தெரியவந்துள்ளது
இதுகுறித்து சாத்துப்பள்ளி வனத்துறை சரக அதிகாரி ஏ.வெங்டேஸ்வரலு நிருபர்களிடம் கூறியதாவது:
''அம்மாபாலம் கிராமத்துக்குள் குரங்குக்கூட்டம் வந்து மக்களைத் தொந்தரவு செய்துள்ளது. குரங்குகளுக்குப் பாடம் கற்பிக்க எண்ணிய அந்தக் கிராமத்து இளைஞர்கள் சிலர் ஒரு குரங்கைப் பிடித்து தண்ணீரில் மூழ்கவைத்துக் கொடுமைப்படுத்தி, மரத்தில் கயிறு மூலம் தூக்கிலிட்டுள்ளனர்.
இதைப் பார்க்கும் மற்ற குரங்குகள் ஊருக்குள் வராது என்று எண்ணி இந்தக் கொடூரமான செயலைச் செய்துள்ளனர்.
குரங்கைத் தூக்கிலிடும் வீடியோவைப் பார்த்தபின் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களைக் கைது செய்துள்ளோம். அவர்கள் மீது வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோ
விசாரணையில் பல குரங்குகளைப் பிடித்துத் தூக்கிலிட அந்தக் கிராமத்து இளைஞர்கர்கள் முடிவு செய்து வலை வைத்துள்ளனர். ஆனால், ஒரு குரங்கு மட்டுமே சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்”.
இவ்வாறு வனத்துறை சரக அதிகாரி தெரிவித்தார்.
விலங்குகளுக்கு எதிராக நடக்கும் கொடூரச் செயல்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த மாதம் கேரள மாநிலத்தில் கர்ப்பிணி யானைக்கு வழங்கப்பட்ட அன்னாசிப் பழத்தில் வெடிமருந்தை நிரப்பிக் கொடுத்தனர். அதைச் சாப்பிட்ட யானை தாடைப்பகுதி சிதைந்து உயிரிழந்தது.
இதுபோல் பசுவுக்கும் தீவனத்தில் வெடிமருந்தை வைத்துக் காயப்படுத்தினர். இப்போது குரங்கைத் தூக்கிலிட்டு மனிதர்கள் தங்களின் கொடூர குணத்தின் பசிக்கு இரை தேடிக்கொண்டுள்ளனர்.