Last Updated : 29 Jun, 2020 02:31 PM

 

Published : 29 Jun 2020 02:31 PM
Last Updated : 29 Jun 2020 02:31 PM

ஹூரியத் மாநாடு அமைப்பிலிருந்து காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி விலகல்

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி ஹூரியத் மாநாடு அமைப்பிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியபின், ஹூரியத் மாநாடு அமைப்பு வலுவிழக்கத் தொடங்கியது. அதன் தலைவராக இருந்த கிலானி தற்போது அமைப்பிலிருந்தே வெளியேறியிருப்பது அந்த அமைப்புக்குப் பெரும் பின்னடைவாகும். தனி நாடு கேட்டும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பேசி வந்தவர்களுக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது.

காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்கப் போராடிவரும் ஹூரியத் மாநாடு அமைப்பின் தலைவராக சையத் அலி ஷா கிலானி இருந்தார். தொடக்கத்தில் ஜமாத் இ இஸ்லாமி காஷ்மீர் அமைப்பில் உறுப்பினராக இருந்து பின்னர் தனயாக தெஹ்ரீக் இ ஹூரியத் எனும் அமைப்பைத் தொடங்கினார்.

இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும், பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பிய தலைவர்களில் முக்கியமானவராக சையத் அலி ஷா கிலானி இருந்தார். அதுமட்டுமட்டுமல்லாமல் ஹூரியத் மாநாடு அமைப்பின் தலைவராகவும் கிலானி இருந்து வந்தார். காஷ்மீரின் சோப்பூர் தொகுதியல் கடந்த 1972, 1977 மற்றும் 1987-ம் ஆண்டுகளில் எம்எல்ஏவாகவும் கிலானி இருந்தார்.

ஆனால், காஷ்மீரி பிரிவினைவாதத்தில் தீவிரமாக இருந்ததால், கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஸ்ரீநகரில் உள்ள அவரின் இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் 90 வயதை நெருங்கிய கிலானிக்கு கடந்த இரு ஆண்டுகளாக உடல்நிலை அடிக்கடி பாதிப்புக்குள்ளானது. இதனால் கட்சி நடவடிக்கையில் ஏதும் தலையிடாமல் ஒதுங்கி இருந்தார். மேலும் இவரைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழலில் ஹூரியத் மாநாடு அமைப்பிலிருந்து விலகுவதாக ஆடியோ செய்தி மற்றும் 4 வரிகள் அடங்கிய கடிதம் மூலம் கிலானி இன்று அறிவித்துள்ளார்

இது தொடர்பாக கிலானியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ ஹூரியத் மாநாடு அமைப்பிலிருந்து சையத் அலி ஷா கிலானி முழுமையாக விலகுகிறார். இவரை வாழ்நாள் தலைவராக நியமித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் விலகல் குறித்த காரணத்தை விளக்கிக் கடிதம் எழுதப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

சையத் அலி ஷா கிலானி எழுதியுள்ள கடித்தில் கூறுகையில், “ஹூரியத் மாநாடு அமைப்பின் உறுப்பினர்கள் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் ஹூரியத் உறுப்பினர்களின் செயல்பாடு குறைந்துவிட்டது. ஏராளமான உறுப்பினர்கள் விலகிவிட்டார்கள். சிலர் தங்களுக்குள் குழு அமைத்து தனியாகக் கூட்டம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். அந்த முடிவையும் அவர்களே வரவேற்கிறார்கள். இதனால் அந்த அமைப்பிலிருந்து முழுமையாக விலகுகிறேன்.

அடுத்து நான் செய்யப்போகிறேன் என்பது குறித்து முடிவு செய்து பின்னர் அறிவிக்கிறேன். என்னுடைய அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்டது வலியைத் தருகிறது. நிதி மற்றும் பிற முறைகேடுகளுக்காக நம்பகத்தன்மை எனும் வாள் உங்கள் தலையில் இப்போது தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், ஆலோசனைக் குழு கூட்டத்தைக் கூட்டவேண்டும் என நினைத்தீர்கள்.

ஒழுக்கமின்மை மற்றும் பிற குறைபாடுகள் புறக்கணிக்கப்பட்டன. பல ஆண்டுகளாக ஒரு வலுவான நம்பகத்தன்மை மிக்க அமைப்பை பல ஆண்டுகளாக நிறுவ நீங்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று, நீங்கள் எல்லா வரம்புகளையும் தாண்டி தலைமைக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். ஆதலால் ஹூரியத் அமைப்பிலிருந்து முழுமையாக விலகுகிறேன்''.

இவ்வாறு சையத் அலி ஷா கிலானி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x