

தெலங்கானா மாநில உள்துறை அமைச்சர் முகமது மெஹ்மூத் அலிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் கரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார்.
கரோனா வைரஸால் தெலங்கானா மாநிலம் மோசமாகப் பாதிக்கப்படாவிட்டாலும்கூட, சில மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. குறிப்பாக ஹைதராபாத், மெகபூப்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் பாதிப்பு குறையவில்லை.
தெலங்கானா மாநிலத்தில் இதுவரை கரோனாவால் 14 ஆயிரத்து 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 247 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் ஹைதராபாத்தில் கரோனா பாதிப்பு குறையாத நிலையில் ஜூலை 15-ம் தேதி வரை மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்துவது குறித்து முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில் மாநில உள்துறை அமைச்சர் முகமது மெஹ்மூத் அலி கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது மாநில அரசை மேலும் இக்கட்டில் தள்ளியுள்ளது. தற்போது ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் மெஹ்மூத் அலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், “கடந்த 3 நாட்களுக்கு முன் அமைச்சர் மெஹ்மூத் அலிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவருக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையில் அவருக்குக் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு நேற்று மாலை மருத்துவர்கள் கூறினர்” எனத் தெரிவித்தன.
இதையடுத்து அமைச்சருக்குப் பாதுகாப்புக்காகச் சென்ற போலீஸார், உதவியாளர்கள் ஆகியோரைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அவர்களுக்குக் கரோனா பரிசோதனையும் செய்யவும் மருத்துவக் குழு தயாராகி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வரை அமைச்சர் மெஹ்மூத் அலி அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மாநில அரசின் புகழ்பெற்ற ஹரிதா ஹராம் திட்டத்தில்கூட அமைச்சர் மெஹ்மூத் அலி பங்கேற்றிருந்தார். அவருடன் காவல்துறையில் முக்கிய உயர் அதிகாரிகளும் சேர்ந்து பங்கேற்றனர்.
தற்போது அமைச்சருக்கு கரோனா தொற்று வந்துள்ளதையடுத்து, அந்த போலீஸ் அதிகாரிகளும் தங்களைப் பரிசோதித்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.