Last Updated : 29 Jun, 2020 12:42 PM

 

Published : 29 Jun 2020 12:42 PM
Last Updated : 29 Jun 2020 12:42 PM

கரோனா வைரஸிருந்து பாதுகாக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ‘ஆரோக்கிய சந்தேஷ்’ ஸ்வீட் : மேற்கு வங்க அரசு புதிய முயற்சி

பெங்கால் ஸ்வீட்டுக்கு எப்போதும் தனிப் பெருமையும் சிறப்பும் உண்டு. நாட்டில் எந்த முக்கியச் சம்பவம் நடந்தாலும் அதையொட்டி சிறப்பு ஸ்வீட்களைத் தயாரித்து சந்தைக்குக் கொண்டுவருவது மேற்கு வங்க மக்களின் இயல்பாக இருக்கிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட், ஐபிஎல் போட்டி, ஐஎஸ்எல் கால்பந்து, சுதந்திரதின விழா, ஐபிஎல், தீபாவளி, நவராத்திரி என அனைத்து முக்கிய நிகழ்வுக்கும் தனித்தனியாக பிரத்யேக ஸ்வீட்களைத் தயாரித்து மாநிலத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் அசத்துவார்கள்.

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இந்த நேரத்திலும் தங்களின் திறமையைக் காட்டியுள்ளனர். இந்த முறை கடை உரிமையாளர்கள் களத்தில் இறங்காமல் மேற்கு வங்க அரசே ஸ்வீட் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.

கரோனா வைரஸ் காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வகையில், “ஆரோக்கிய சந்தேஷ்” எனும் ஸ்வீட்டை மேற்கு வங்க அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

சுந்தரவனக் காடுகளில் கிடைக்கும் தேனி அபார மருத்துவ குணமும், உயர்ந்த தரமும் கொண்டவை என்பதால், அந்த தேனைக் கொண்டு இந்த ஸ்வீட் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஸ்வீட்டில் செயற்கைப் பொருட்கள் ஏதும் சேர்க்கப்படவில்லை. சர்க்கரை கூட சேர்க்கப்படாமல் முற்றிலும் தேன் மூலம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. தேன், பசுவின் பாலில் இருந்து எடுக்கப்பட்ட பாலாடை, துளசி ஆகியவை மூலம் மட்டுமே இந்த இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

கரோனாவைத் தடுக்கும் மருந்து அல்ல, மக்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஸ்வீட் என்று கூறி இந்த ஆரோக்கிய சந்தேஷை அறிமுகப்படுத்த உள்ளது.

இதுகுறித்து சுந்தரவனக் காடுகள் அமைச்சர் மந்துராம் பகிரா கூறுகையில், “சுந்தரவனக் காடுகளில் இருந்து கிடைக்கும் தேன் அதிகமான மருத்துவ குணமுடையது, தரத்திலும் உயர்வானது. அந்தத் தேன், பசுவின் பாலில் இருந்து எடுக்கப்படும் பாலாடை, துளசி ஆகியவை மூலம் ஆரோக்கிய சந்தேஷ் இனிப்பு தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த இனிப்பு கரோனா வைரஸைத் தடுக்காது, ஆனால், மனிதனின் உடலுக்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

சுந்தரவனக் காடுகளில் உள்ள பிர்காலி, ஜார்காலி ஆகிய அடர்ந்த காடுகளில் இருந்து இந்தத் தேன் கொண்டுவரப்பட்டு, மிகவும் நவீன முறையில் பாதுகாக்கப்பட்டு, இந்த ஸ்வீட் செய்யப்படுகிறது. அடுத்த இரு மாதங்களில் அனைத்து மக்களுக்கும் எளிதில் வாங்கும் விலையில் விற்பனை செய்யப்படும். முதல்கட்ட விற்பனை விரைவில் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.

இந்த மாதத் தொடக்கத்தில் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற தனியார் ஸ்வீட் கடை, மஞ்சள், துளசி, ஏலக்காய் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள், இமாலயத் தேன் ஆகியவை சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தி சந்தேஷ் எனும் இனிப்பு வகையை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x