Last Updated : 29 Jun, 2020 10:00 AM

 

Published : 29 Jun 2020 10:00 AM
Last Updated : 29 Jun 2020 10:00 AM

எல்லையில் இந்திய- சீன ராணுவ மோதலுக்கு ஜவஹர்லால் நேருவும், காங்கிரஸும்தான் பொறுப்பு: சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்துக்கு இடையே நடந்து வரும் மோதலுக்கு காங்கிரஸும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவும்தான் , காரணம், பொறுப்பு என்று மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்

சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் நடந்த பாஜக பேரணியில் காணொலி மூலம் போபால் நகரிலிருந்தவாரே முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். தொண்டர்கள் மத்தியில் நேற்று அவர் பேசியதாவது:

காங்கிரஸிலிருந்து வந்த எந்த பிரதமரும் கிழக்கு லடாக் எல்லையில் துணிச்சலாக சாலை அமைத்தது கிடையாது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான் சாலை அமைத்து வருகிறது. இதைப் பார்த்துத்தான் சீனா ஆத்திரப்படுகிறது. ஏனென்றால் இதற்கு முந்தைய இந்திய அரசும் எல்லையில் சாலை அமைக்காத நிலையில் மோடி அரசு சாலை அமைப்பது சீனாவுக்கு எரிச்சலைத் தருகிறது

நரேந்திரமோடி தலைமையில் இந்தியா தொடர்ந்து வளர்ந்து வந்தால், தன்னை எப்படியும் வளர்ச்சியில் முறியடித்துவிடும் என்று சீனா அஞ்சி, இதுபோன்ற எரிச்சலூட்டும் பணியில் ஈடுபடுகிறது.

ஆனால் சீனாவை நாங்கள் எச்சரிக்கிறோம். இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்த நினைத்தால், 130 கோடி மக்களும் சேர்ந்து சீனாவை அழித்து விடுவார்கள். கடந்த 1962-ம் ஆண்டில் இருந்தது போன்று இந்தியா இப்போது இல்லை என்பதை சீனா கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா தற்போது நரேந்திர மோடி தலைமையில் இருக்கிறது. ஆத்திரமூட்டும் செயலையும், அத்துமீறலையும் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று பிரதமர் மோடி ஏற்கெனவே எச்சரித்துள்ளார்..

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் செயலுக்கு நமது ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. எல்லையில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு நான் தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன்.

மோடி தலைமையில் இந்தியா புதிய அடையாளத்துடன் இருக்கிறது. ஒருநேரத்தில் சீனா ஆவேசமாக நமக்கு எதிராகச் செயல்பட்டபோது, இலங்கை, பாகிஸ்தானும் கூட நம்மை மிரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டார்கள் என்பதை காங்கிரஸ் கட்சியினர் மறந்துவிட்டார்களா

கடந்த 1962-ல் சீனா நமது எல்லைக்குள் நுழைந்தது தெரியாமல் அப்போதைய பிரதமர் நேரு இருந்தார். நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி. 1962 போரில் இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பிரதமர் நேரு, ஒரு புல்கூட வளராத அந்த நிலைத்தை வைத்து நாம் செய்யப்போகிறோம் என்றார்

அதற்கு அந்த எம்.பி., உங்கள் தலையில் ஒன்றும் வளராது என்பதற்காக அது எதற்கும் உதவாது என நினைத்து தூக்கி வீசிவிடலாமா என்று கேட்டார். நமது புனித நிலம் குறித்து நேருவின் பேச்சும், காங்கிரஸ் கட்சியின் சிந்தனையையும் இதன் மூலம் அறியலாம்.

இந்தியா-சீனா ராணுவப் பிரச்சினைக்கு தொடக்கமாக இருந்தது காங்கிரஸும், முன்னாள் பிரதமர் நேருவும்தான். ஆனால் இந்த பிரச்சினைக்கு மோடி நிரந்தரமான தீர்வு காண்பார்.

கடந்த 2005-06-ம் ஆண்டு ராஜீவ்காந்தி அறக்கட்டளை சீனாவிடம் இருந்து நன்கொடைகளைப் பெற்றுள்ளது. சீனாவுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான தொடர்பு குறித்து சோனியா காந்தி விளக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தின் தவறுக்காக சீனா 43 ஆயிரம் சதுர கி.மீ பரப்பை ஆக்கிரமித்துள்ளது. தேசத்திடம் காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எல்லை குறித்து பேசும் பேச்சு அனைத்தும் ராணுவத்தின் மனவலிமையை குலைக்கும் விதத்தில் இருக்கிறது. அந்த பாவத்தை காங்கிரஸும், ராகுல் காந்தியும் செய்கிறார்கள்.

எப்போது ராகுல்காந்திக்கு நல்ல புத்தி கிடைக்கும். ராகுல் காந்தி பேசுவதைப் பார்த்தால் அவரின் வயதுக்கும், அறிவுக்கும் தொடர்பில்லாமல் பேசுகிறார். இதுபோன்ற தலைவர் கிடைத்தது காங்கிரஸின் துரதிர்ஷ்டம். ராகுலையும், அவரின் கட்சியையும் தேசம் மன்னிக்காது

இவ்வாறு சிவராஜ் சவுகான் பேசினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x