

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பிரதமர் மோடியை இன்று டெல்லிக்கு சென்று சந்திக்கவுள்ளா்.
கடந்த 2018 நவம்பரில் மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் அதிக இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராக பதவியேற்று 15 மாதங்கள் ஆட்சி நடத்தினார்.
அவருக்கு எதிராக காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா போர்க்கொடி உயர்த்தினார். அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதன்பின் ஜோதிர் ஆதித்யசிந்தியாவும் அவரது ஆதரவாளர்களும் பாஜகவில் இணைந்தனர்.
இதனால் கடந்த மார்ச் 20-ம் தேதி காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த மார்ச் 23-ம் தேதி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக அரசு பதவியேற்றது. அப்போது அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. கரோனா காலம் என்பதால் அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜகமூத்த தலைவர்கள் நரோத்தம்மிஸ்ரா, கமல் படேல், மீனா சிங் ஆகியோரும் சிந்தியா ஆதரவாளர்களான துளசிராம்சிலாவத், கோவிந்த் ராஜ்புத்ஆகியோரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மத்திய பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்களின் அடிப்படையில் 35 பேரை அமைச்சர்களாக நியமிக்க முடியும். தற்போது முதல்வரையும் சேர்த்து 6 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அமைச்சரவை முழு அளவில் பதவியேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் 9 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதற்காக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பிரதமர் மோடியை இன்று டெல்லிக்கு சென்று சந்திக்கவுள்ளா். அப்போது அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசிக்கவுள்ளார்.