

லடாக் பகுதியில் உள்ள ஒரு ஆற்றில் படகு கவிழ்ந்ததில் ராணுவவீரர் லான்ஸ் நாயக் சலீ்ம் கான் (23)உயிரிழந்தார். அவரது உடல் சொந்தஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை அடுத்துள்ள மர்தான்ஹேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சலீ்ம் கான் (23). ராணுவத்தில் பணியாற்றி வந்தஇவர், கடந்த 26-ம் தேதி லடாக்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் பாயும் ஷியோக் ஆற்றில்கட்டுமானப் பணி சார்ந்த வேலைக்காக சென்றபோது படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் சொந்த ஊர் வந்தடைந்தது.
அங்கு சலீம் கானின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, கான் உடல் மீது போர்த்துவதற்காக அவரது தாயார் நசிமா பேகத்திடம் (55) தேசியக்கொடி வழங்கப்பட்டது. மகன் இழப்பால் துயரத்தில் கண்ணீர் விட்ட நசிமா, தேசியக்கொடியை தழுவி முத்தமிட்டார். இறுதிச் சடங்கில் கிராமத்தவர்கள் திரண்டு சலீம் கான் அமர் ரஹே என முழக்கமிட்டனர்.
நசிமா கூறும்போது "சலீம் கான்எனது பாசத்துக்குரியவன் என்றாலும் இந்த நாட்டுக்கு உரியவன்.இந்த தேசத்தின் மகன். இரு நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது விரைவில் வீட்டுக்கு வரப்போவதாக தெரிவித்தான். சில பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்த கான், அந்தப் பகுதியில் என்ன நிகழ்கிறது என்பதை விரிவாகக் கூறவில்லை. எங்கள் குடும்பத்துக்கு ஆதாரமே சலீம் கான்தான். அனைத்தையும் இழந்து நிற்கிறோம். எனது கணவரும் ராணுவத்தில் பணியாற்றியவர். எனது மகனும் இப்போது தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளான்” என்றார்.
இதனிடையே உயிரிழந்த ராணுவ வீரர் சலீமின் குடும்பத்துக்கு கருணைத் தொகையாக ரூ.50 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் நாயக்காக பணியாற்றி ஓய்வுபெற்ற சலீம் கானின்சித்தப்பா புத் தின் கான் கூறும்போது, “18 ஆண்டுக்கு முன்பு சலீம்கானுக்கு 7 வயது ஆன நிலையில் அவனது தந்தை மங்கல் தின் காலமானார். ராணுவத்தில் நாயக்காக பணியாற்றிய மங்கல் தின், ரயிலில் சென்றபோது தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்து மனநிலை பாதிப்புக்குள்ளானது. அதன்பின் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு உயிிரிழந்தார்" என்றார். சலீம் கானின் வீட்டில் 4 பேர்உள்ளனர். சலீமின் சம்பளமும் அவரது தந்தையின் ஓய்வூதியமுமே குடும்பத்தின் வருவாய் ஆதாரம்.