Last Updated : 28 Jun, 2020 04:42 PM

 

Published : 28 Jun 2020 04:42 PM
Last Updated : 28 Jun 2020 04:42 PM

இந்தியாவில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பு; அமேசான் நிறுவனம் அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

அமேசான் இந்தியா நிறுவனம், உள்நாட்டு அளவிலும், வெளிநாட்டு அளவிலும் ஷாப்பிங் அனுபவத்தை சிறப்பானதாக வாடிக்கையாளர்களுக்கு மாற்றும் விதத்தில், தன்னுடைய வாடிக்கையாளர் சேவை மையத்துக்காக தற்காலிகமாக 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த 20 ஆயிரம் ஊழியர்களும் தற்காலிகமாக அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்த 6 மாதங்களில் வாடிக்கையாளர்கள் அதிகமான அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களை சமாளிக்கும் வகையில் இந்த 20 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளன.

ஹைதராபாத், கோவை, புனே, நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூரு, இந்தூர், போபால், லக்னோ ஆகிய இடங்களில் புதிய வாடிக்கையாளர் சேவை மையங்கள் திறக்கப்பட உள்ள என்று அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது. பெரும்பாலும் வாடிக்கையாளர்களுடன் காணொலி மூலம், கணினி மூலம் உரையாடுவதாக இருக்கும், வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு மின்அஞ்சல் மூலம் உதவுவது, சாட்டிங் மூலம் கேள்விகளுக்கு பதில் அளிப்பது, சமூக ஊடகங்கள், தொலைப்பேசி வாயிலாக பதில் அளித்தல், வாடிக்கையாளர்களுடன் உரையாடுதல் போன்றவை இருக்கும்.

இந்த 20 ஆயிரம் பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி என்பது 12-வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது. தமிழ், ஆங்கிலம், இந்தி,தெலுங்கு, அல்லது கன்னடம் நன்றாகப் பேசத்தெரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக பணிக்கு எடுக்கப்படும் ஊழியர்களின் செயல்பாடு, பணித்திறன் ஆகியவற்றை ஆய்வு செய்து தற்காலிக ஊழியர்கள் தேவைக்கு ஏற்ப நிரந்தர ஊழியர்களாக மாற்றம் செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து அமேசான் இந்தியா வாடிக்கையாளர் சேவையின் இயக்குநர் அக்சய் பிரபு கூறுகையில் “ அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு அதிகமான நபர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறோம்.

அடுத்த 6 மாதங்களில் வாடிக்கையாளர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் புதிதாக 20 ஆயிரம்பேரை ேவலைக்கு எடுக்க இருக்கிறோம். இப்போது இருக்கும் நெருக்கடியான கரோனா காலத்தில் உறுதியான வேலையும், வாழ்வாதாரத்தையும் அமேசான் வழங்கும்” எனத் தெரிவித்தார்.

வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை, கட்டமைப்பு, தொழில்நுட்பம், சரக்குப்போக்குவரத்து போன்றவற்றில் உருவாக்க தொடர்ந்து முதலீடுகளை அமேசான் வழங்கும் என முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x