

கரோனா போன்ற பெரும் நோய் ஏற்படவில்லை எனில் வாழ்க்கையைப் பற்றி நாம் சிந்திக்காமலே கூட போயிருப்போம் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “கரோனா வைரஸானது, நமது வாழ்க்கைமுறையையே மாற்றியமைத்து விட்டது. லண்டனிலிருந்து வெளியாகும் Financial Times பத்திரிக்கையில் ஒரு மிகவும் சுவாரசியமான கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. கரோனா காலத்தில் இஞ்சி, மஞ்சள் உட்பட பிற மசாலாக்களின் தேவை, ஆசிய நாடுகள் தவிர, அமெரிக்கா வரையிலும்கூட அதிகமாகி இருக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த காலகட்டத்தில் நமது நோய் எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொள்வதில் உலகனைத்தின் கவனமும் இருக்கிறது; அதைப் போன்றே நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கவல்ல இந்தப் பொருட்களின் பயன்பாட்டுத் தன்மை நம் நாட்டுடன் தொடர்புடையது. நாம் இவற்றின் சிறப்பம்சத்தை, உலக மக்களுக்கு எளிய, சுலபமான வழிகளில் புரிய வைக்க வேண்டும். ஆரோக்கியமான உலகைப் படைப்பதில் இது நமது பங்களிப்பாக இருக்கும்.
கரோனா போன்ற பெரும் சங்கடம் வந்திருக்கவில்லை என்றால், ஒருவேளை, வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கை ஏன் ஏற்பட்டிருக்கிறது, வாழ்க்கை எத்தகையது ஆகியன பற்றி நாம் சிந்திக்கக் கூட முயன்றிருக்க மாட்டோம். பலர் மனஅழுத்தங்களோடு வாழ்ந்து வருகிறார்கள்.
இன்னொரு புறம், இந்த ஊரடங்குக் காலத்தில், சந்தோஷங்களின் சின்னச்சின்ன விஷயங்களைக் கூட தாங்கள் மீண்டும் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதாக சிலர் என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியமான உள்ளரங்கு விளையாட்டுக்களை, குடும்பத்தாரோடு சேர்ந்து விளையாடி ஆனந்தமாக இருந்த அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.” என்றார் பிரதமர் மோடி.