

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததையடுத்து ஸொமாட்டோ நிறுவனத்தில் அதன் சீன முதலீடுகளை எதிர்த்து ஊழியர்கள் சிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது நிறுவன டி-ஷர்ட்களை எரித்தும் கிழித்தும் போராட்டம் நடத்தினர்.
கொல்கத்தாவில் நடந்த இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சில ஊழியர்கள் சீன முதலீட்டை எதிர்த்து வேலையைத் துறந்ததாக தெரிவித்தனர். மேலும் மக்களும் ஸொமாட்டோ மூலம் உணவுகளை ஆர்டர் செய்ய வேண்டாம் என்று வாடிக்கையாளர்களை வலியுறுத்தினர்.
2018-ம் ஆண்டு சீன ஆன்லைன் மேஜர் நிறுவனமான அலிபாபாவின் கிளை நிறுவனமான ஆண்ட் பைனான்சியல் 210 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஸொமாட்டோவில் முதலீடு செய்தது. சமீபத்தில் மீண்டும் ஒரு 150 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்டது ஆன்ட் பைனான்சியல்.
“சீன நிறுவனங்கள் நம்மை வைத்துச் சம்பாதிக்கின்றனர். நம் ராணுவ வீரர்களையே கொல்கின்றனர். நம் நிலப்பகுதியை ஆக்ரமிக்கின்றனர், இதனை அனுமதிக்க முடியாது” என்கிறார் ஸொமாட்டோ ஊழியர் ஒருவர்.
மேலும் இன்னொரு ஊழியர், “பட்டினி கிடப்பதற்கும் தயார். சீன முதலீடு கொண்ட நிறுவனங்களில் பணியாற்ற விரும்பவில்லை” என்றார்.