

கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதியின்றி விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் மீது ஜெய்ப்பூர் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்
இவர்கள் இருவர் தவிர்த்து, தேசிய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பி.எஸ்.தோமர், அவரின் மகன் அனுராக்தோமர், மூத்த அறிவியல் விஞ்ஞானி அனுராக் வர்ஷினி ஆகியோர் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, கரோனா நோய்க்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக நேற்று அறிவித்தார். கரோனில் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் அந்த மாத்திரை, ஸ்வாசரி எனும் ஆயுர்வேத மருந்தை உட்கொண்டால் 7 நாட்களில் கரோனா நோய் குணமடையும் என்று பதஞ்சலி நிறுவனம் அறிவித்தது.
இந்த மருந்தை நூற்றுக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு அளித்துப் பரிசோதித்ததில் அவர்கள் நோயிலிருந்து முழுமையாக குணமடைந்ததாகவும் பாலகிருஷ்ணா தெரிவித்தார்.
ஆனால், இதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. பதஞ்சலி நிறுவனம் கரோனா நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது என்றால், அதுகுறித்த தகவல்களை அமைச்சகத்துக்கு அனுப்பி அதைப் பரிசோதித்து உண்மையானது தானா என ஆய்வு செய்தபின்புதான் விளம்பரம் செய்ய வேண்டும்.
ஆனால், எந்தத் தகவலையும் அனுப்பாமல் விளம்பரம் செய்யக்கூடாது, அறிவிக்கக் கூடாது. உடனடியாக மருந்து குறித்த தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவித்தது.
இந்த மருந்துகளை ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ஆய்வு நிறுவனமான தேசிய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (என்ஐஎம்எஸ்) பரிசோதிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் மருந்தை பரிசோதித்தது, கரோனா நோயாளிகளை குணப்படுத்த மருந்து கண்டுபிடித்ததாக மக்களை ஏமாற்றியதாக பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவன இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் மீது வழக்கறிஞர் பல்ராம் ஜாகத் என்பவர் ஜெய்பூர் ஜோதிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பல்ராரம் ஜாகத் புகார் அளித்தபின், மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவனத்தின் மீது புகார்கள் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டன.
இந்தப் புகாரையடுத்து, பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவன இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜெய்பூர் நகர போலீஸ் உதவி ஆணையர் அசோக் குப்தா கூறுகையில், “வழக்கறிஞர் பல்ராம் ஜாகத் உள்ளிட்ட பலர் அளித்த புகாரின் அடிப்படையில் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக போலியாக விளம்பரம் செய்த பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவன இயக்குநர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது ஐபிசி பிரிவு 420 மற்றும் மருந்து மற்றும் தடைசெய்யப்பட்ட விளம்பரங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் எஸ்.கே. திஜாராவாலா கூறுகையில், “எங்கள் நிறுவனத்தின் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்திப்போம். பாரம்பரிய முறைப்படி, அனுபவமான மருத்துவர்கள் ஆலோசனைப்படி அஸ்வகந்தா, கிலோய், துளசி ஆகியவற்றால் அந்த மருந்து தயாரிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.