Published : 28 Jun 2020 08:13 AM
Last Updated : 28 Jun 2020 08:13 AM

ஆந்திராவில் மேலும் ஒரு ஆலையில் விஷவாயு கசிவு: ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் கவலைக்கிடம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று விஷவாயு கசிந்ததில் அதன் மேலாளர் உயிரிழந்தார். 3 தொழிலாளர்கள் பாதிப்படைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் கடந்த மாதம் 7-ம் தேதி அதிகாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் சுவாச பிரச்சினை மற்றும் சரும பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் இறந்த வர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர அரசு தலா ரூ.1 கோடி வழங்கியது. இது தொடர்பான வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இம்மாநிலத்தின் கர்னூல் மாவட்டம், நந்தியாலாவில் ‘எஸ்.பி.ஒய். அக்ரோ இன்டஸ்ட்ரீஸ்’ என்ற பெயரில் ரசாயன தொழிற்சாலை இயங்கிவருகிறது. இங்கு நேற்று காலையில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதை அறிந்ததொழிலாளர்கள் இதுகுறித்து பொது மேலாளர் ஸ்ரீநிவாசுலுவுக்கு தகவல் கொடுத்துவிட்டு வெளியே ஓடினர். இவர்களுடன் ஸ்ரீநிவாசுலு ஓடிவரும்போது விஷவாயுவால் மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தப்பி வந்த 3 பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில் நந்தியாலா அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர்தீயணைப்புப் படையினர் விஷவாயு கசிவை தடுத்து நிறுத்தினர்.

தகவல் அறிந்ததும், கர்னூல் மாவட்ட ஆட்சியர் வீரபாண்டியன், காவல் கண்காணிப்பாளர் பக்கீரப்பா உள்ளிட்டோர் சம்பவஇடத்துக்கு விரைந்தனர். மாவட்ட ஆட்சியர் வீரபாண்டியன் கூறும்போது, “போர்க்கால அடிப்படையில் விஷவாயு பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பயப்படவேண்டாம். விஷவாயுகசிவு முற்றிலும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x