

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான விஎச்பி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஎச்பி தேசிய துணைத் தலைவரும், ராம்ஜென்மபூமி ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலருமான சம்பத் ராய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்துக்குப் பின்னர் சம்பத் ராய் கூறும்போது, “ராமர் கோயில் கட்டும் பணியில் இந்துக்களையும் கரசேவகர்களையும் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக துறவிகளிடமிருந்து உத்தரவுகளை எதிர்பார்க்கிறோம். ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி பற்றாக்குறை ஏதும் ஏற்படவில்லை. ஆனால் ராமர் கோயில் கட்டுவதற்கு ஒவ்வொரு இந்துக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக ஒவ்வொருவரிடமும் ரூ.10 நன்கொடையாகக் கேட்க முடிவு செய்துள்ளோம். விஎச்பி தலைவர்கள் 1990-களில் முடிவு செய்தபடி கோயில் கட்டுமானம் இருக்கும். சில துறவிகள், கோயில் மாதிரியில் சில மாற்றங்கள் தேவை எனக் கூறி வருகின்றனர். ஏற்கெனவே செதுக்கப்பட்ட கற்களுக்கு பதிலாக மார்பிள் கற்களை பயன்படுத்தலாம் என்று சொன்ன யோசனை நிராகரிக்கப்பட்டது” என்றார். - பிடிஐ