அசாமில் வெள்ளத்தால் 2.53 லட்சம் பேர் பாதிப்பு: உயிரிழப்பு 16 ஆக உயர்வு

அசாமில் வெள்ளத்தால் 2.53 லட்சம் பேர் பாதிப்பு: உயிரிழப்பு 16 ஆக உயர்வு
Updated on
1 min read

அசாமில் வெள்ளத்தால் 2.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழை காரணமாக பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 16 மாவட்டங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. 2.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை மற்றும் வெள்ளத்துக்கு ஏற்கெனவே 15 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், திப்ருகர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கி மேலும் ஒருவர் இறந்தார். இதனால், வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வநாத், உடால்குரி, பஸ்கா, நல்பாரி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளம் அபாய அளவைத்தாண்டி ஓடுகிறது. தேமாஜி மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தின்சுகியா, மஜூலி, திப்ருகர் ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகம் உள்ளது. 6 மாவட்டங்களில் 142 நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்கள் அமைக்கப்பட்டு 18 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மோரிகான் மாவட்டத்தில் உள்ள போபிடோரா வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த வியாழக்கிழமை வெள்ளம் புகுந்தது. 80 சதவீத பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், காண்டாமிருகம் உள்ளிட்ட வனவிலங்குகள் அருகில் உள்ள மேடான பகுதிக்கு சென்றுவிட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் நிர்வாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in