

விப்ரோ நிறுவனத்தின் நிறுவனரும் மிகச் சிறந்த கொடையாளர்களுள் ஒருவருமான அசிம் பிரேம்ஜியும், அவரது மனைவி யஸீம் பிரேம்ஜியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அர்த்தமற்ற புகார்களால் தாங்கள் துன்புறுத்தப்படுவதாகவும் இதற்கு உச்ச நீதிமன்றம் உரிய தீர்வை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கோரியுள்ளனர்.
வித்யா, ரீகல் மற்றும் நபியன் ஆகிய 3 நிறுவனங்களை பிரேம்ஜி குழுமத்துக்குச் சொந்தமான ஹஷம் இன்வெஸ்ட்மென்ட் மற்றும்டிரேடிங் நிறுவனத்துடன் இணைப்பதை எதிர்த்து பெங்களூரு நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தபுகார் தொடர்பாக பெங்களூருநீதிமன்றம் தங்களை அநாவசியமாக அலைக்கழிப்பதாகவும், நீதிமன்றம் தங்களுக்கு எதிராக பிறப்பித்த சம்மன்களை ரத்து செய்யவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி சார்பாக வழக்கறிஞர் மகேஷ் அகர்வால் மனு தாக்கல் செய்துள்ளனர். வித்யா, ரீகல், நபியன் ஆகிய 3 நிறுவனங்களும் 1974-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் பங்குகள் அனைத்தும் 1980-ம் ஆண்டில் ஒருங்கிணைக்கப்பட்டன. 2015-ம் ஆண்டில் இவை ஹஷம் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டன. இதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றமும் இணைப்புக்கு அனுமதி அளித்தது.
சுபிக் ஷா காசோலை
ஆனால், சுபிக் ஷா நிறுவனர் ஆர்.சுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. 2013-ம் ஆண்டு சுப்பிரமணியன் நிறுவனம் அளித்தகாசோலைகள் போதிய நிதி இல்லாமல் திரும்பின. இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சுப்பிரமணியன் பின்னணியில் செயல்படும் இந்தியா அவேக் டிரான்ஸ்பரன்ஸி எனும் தன்னார்வ நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது. மூன்று நிறுவனங்களும் இணைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நிறுவனம் வழக்கு பதிவு செய்தது. இணைப்பு தொடர்பான அனைத்துவிவரங்களும் செபி, பங்குச் சந்தைமற்றும் நிறுவன விவகார அமைச்சகத்துக்கு 2015-ம் ஆண்டிலேயே தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், பெங்களூரு நீதிமன்றம் ஆரம்பகட்ட விசாரணை ஏதும் நடத்தாமல் தன்னார்வ நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் சம்மன் அனுப்பி உள்ளது. விப்ரோ நிறுவனத்துக்கு எதிராகவும், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை செயல்பாடுகளை முடக்கும் வகையிலானசம்மனை நிறுத்தி வைக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதேபோன்ற குற்ற புகார்கள் பெங்களூரு தனி நீதிமன்றங்களிலும், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் என்சிஎல்ஏடி-யில் 4 முறையும் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதேபோல தேசிய நிறுவன சட்ட வாரியமும் (எல்சிஎல்ஏடி) இதை தள்ளுபடி செய்தது. நான்கு புகார்களும் தாக்கல் செய்ய சுப்ரமணியன் உடந்தையாக இருந்துள்ளதாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டில் என்ஜிஓ தாக்கல் செய்த புகாரில் வித்யா, ரீகல், நபியன் ஆகிய மூன்று நிறுவனங்களும் யாருக்கும் சொந்தமானதல்ல. எனவே இந்த மூன்று நிறுவனங்களும் அரசுக்கு சொந்தமானது என புகாரில் கூறப்பட்டிருந்தது. புகார் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இவை இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
என்ஜிஓ நிறுவனத்தை ஆர்.சுப்பிரமணியன் தனது விருப்பு வெறுப்புகளை நிறைவேற்ற பயன்படுத்திக் கொண்டுள்ளார். இந்த என்ஜிஓ அசிம் பிரேம்ஜி மற்றும் அவர் சார்ந்த நிறுவனங்கள் அறக்கட்டளைகள் மீது புகார்களை பதிவு செய்துள்ளன. சுப்ரமணியன் தனது சுபிக் ஷா நிறுவனத்தில் ரூ.230 கோடி முதலீடு செய்யுமாறு அசிம் பிரேம்ஜிக்குச் சொந்தமான ஸாஷ் முதலீடு மற்றும் வர்த்தக நிறுவனத்தை அணுகியுள்ளார்.அதேபோல ஹஷம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தையும் முதலீடு செய்யுமாறு கோரியுள்ளார். இந்நிறுவனங்களில் பெற்ற கடனை திரும்ப செலுத்த அளித்த ரூ.31.32 கோடி மதிப்பிலான காசோலைகள் போதிய பணமில்லாததால் திரும்பியுள்ளன. இதைத் தொடர்ந்து ஹஷம் நிறுவனம் புகார் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் மனுவில்குறிப்பிடப்பட்டுள்ளது
கோடிக்கணக்கில் சமூக பணி
கடந்த 2010-ம் ஆண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டதில் இருந்துஇதுவரை ரூ.1,50,000 கோடி தொகை பல்வேறு சமூக பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ரூ.1,125 கோடி வரை அறக்கட்டளை பல்வேறு வகைகளில் செலவிட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.