Published : 27 Jun 2020 05:49 PM
Last Updated : 27 Jun 2020 05:49 PM

கரோனா பிரச்சினையால் தெற்காசியாவில் குழந்தைகளின் கல்வி, உணவு, சுகாதாரம் கடுமையாகப் பாதிப்பு: யுனிசெஃப் தகவல்

கரோனா வைரஸ் மற்றும் அது தொடர்பான பிரச்சினையால் தெற்காசியாவில் குழந்தைகளின் கல்வி, உணவு, சுகாதாரம் கடுமையாகப் பாதிப்படக்கூடும் என்று யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அறிக்கையை சுட்டிக்காட்டி சமீபத்தில் யுனிசெஃப் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

"தெற்காசியாவின் 60 கோடி குழந்தைகளை எவ்வாறு கோவிட்-19 தொற்று அச்சுறுத்துகிறது" என்ற தலைப்பில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''உலக சுகாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தெற்காசிய நாடுகளில் பொது சுகாதார அமைப்பு நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், தட்டம்மை மற்றும் நிமோனியா போன்ற நோய்களுக்குக் குழந்தைகள் வரும் காலங்களில் பாதிக்கப்படலாம்.

கடந்த 2016-ம்ஆண்டு அறிக்கையின்படி தெற்காசியிவில் உள்ள 8 நாடுகளில் 24 கோடி குழந்தைகள் பல பரிமாண வறுமையால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் 15.5 கோடி குழந்தைகள் வசிக்கின்றனர்.

கரோனா வைரஸால் ஏற்படும் சமூக மற்றும் பொருளாதார விளைவுகளால் ஏழ்மையில் வாழ்ந்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். அடுத்த வரும் 6 மாதங்களில் கூடுதலாக 12 கோடி குழந்தைகள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் செல்லும் ஆபத்துள்ளது.

மருத்துவ வசதியில் கரோனா ஏற்படுத்திய தாக்கம்

கரோனா வைரஸின் தாக்கத்தைக் குறைப்பதிலேயே மாநில அரசுகளும், மத்திய அரசும் தொடர்ந்து கவனம் செலுத்தி அதற்கான மருத்துவ வசதிகளை வழங்குவதில் இருக்கிறார்கள்.

இதனால் ஏழை மற்றும் விளிம்புநிலை சமூகத்தில் இருக்கும் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் மற்ற நோய்களைத் தடுப்பதற்கான, அதற்குத் தேவையான சிகிச்சையைப் பெற முடியவில்லை, பெறுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், போக்குவரத்து வசதிகளை நிறுத்தியதாலும் நிலைமை மேலும் மோசமடைந்தது.

கரோனா வைரஸ் நோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் நலன், பச்சிளங்குழந்தைகள் நலன், குழந்தைகள் நலன் ஆகியவற்றிலிருந்து, மருத்துவப் பணியாளர்கள், உபகரணங்கள், மருத்துவ வசதிகள், மருந்துகள் போன்றவை அனைத்தும் கரோனா மீது திசை திருப்பப்பட்டு வருகிறது.

இந்தச் சூழல் உலக அளவில் இருப்பதால் கர்ப்பிணிகள், பச்சிளங்குழந்தைகள், குழந்தைகள் ஆகியோருக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதில் இடையூறு ஏற்படுகிறது.

கர்ப்பிணிகள், பச்சிளங் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கவனம் குறைக்கப்பட்டுள்ளதால், ஏறக்குறைய 36 ஆயிரம் தாய்மார்கள் உயிரிழக்க நேரிடும். மக்கள் தொகை அடர்த்தி, மோசமான பொதுச் சுகாதார நிலைமை காரணமாக பெரும்பாலான மகப்பேறு கால மரணங்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் நிகழக்கூடும்.

வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் பச்சிளங்குழந்தைகள் மரணங்கள் அதிகரிக்கலாம்.
கரோனா வைரஸ் மற்றும் அது தொடர்பான பிரச்சினையால் அடுத்த 12 மாதங்களில் தெற்காசியாவில் 5 வயதுக்குட்பட்ட 8 லட்சத்து 81 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது. இந்த உயிரிழப்பு பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தானில் இருக்கும்.

உணவுப் பாதுகாப்புக்கு கவலையளிக்கும் அச்சுறுத்தல்

கரோனா வைரஸ் லாக்டவுனால் ஏற்பட்ட வேலையிழப்பால், வருமானம் குறைந்தும், வருமானம் இல்லாமலும் ஏழைக் குடும்பங்கள் குழந்தைகளுக்குச் சரிவிகித சத்தான உணவு வழங்குவதில் கடினமான சூழல் ஏற்படலாம்.

அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் விலை, சந்தைகளுக்கு காய்கறிகள், பழங்கள், உணவுப்பொருட்களை எடுத்துவருதலில் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறு போன்றவற்றால் விளிம்பு நிலையில் இருக்கும் குடும்பங்கள், ஏழைக்குடும்பங்கள் குறிப்பாக நகர்ப்புறங்களில் வசிப்போரின் உணவுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் வரலாம்

கரோனா வைரஸ் பாதிப்பு வருவதற்கு முன், 5 வயதுக்குட்பட்ட 77 லட்சம் குழந்தைகள் தீவிரமான உடல் உறுப்பு வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். 5.60 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், வளர்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இதில் இந்தியாவில் மட்டும் 4 கோடி குழந்தைகள் இருந்தனர்.
இதில் வசதிகள் இல்லாத தொலைவான இடத்தில் இருக்கும் 32 ஆயிரம் குழந்தைகள் பெரும் இடரைச் சந்திப்பார்கள். தெற்காசியாவில் இருக்கும் பல லட்சக்கணக்கான குழந்தைகள் நாள்தோறும் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவில் 24.70 கோடி குழந்தைகளின் பள்ளிக் கல்வி பாதிப்பு

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் இந்தியாவில் குழந்தைகளின் கல்வியை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 24.70 கோடி குழந்தைகளின் பள்ளிக்கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 2.80 கோடி குழந்தைகள் அங்கன்வாடியில் பயில்பவர்கள்.

இந்தியாவில் குழந்தைகளுக்கு டிஜிட்டல், ஆன்லைன் வழிக்கல்வி வசதி தொடங்கப்பட்டாலும், ஏழை மற்றும் விளிம்பு நிலையில் இருக்கும் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளால் இந்த வசதிகளைப் பெற முடியாததால், கல்வி கற்றலில் பெரிய இடைவெளி உருவாகிறது. டிஜிட்டல் கல்வி குழந்தைகளை ஏழை மற்றும் பணக்காரர் என்று பிரித்துவிடுகிறது.

இந்தியா மற்றும் நேபாளத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்கள் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்டு, அங்கு கரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடுத்து பள்ளிகள் திறக்கப்படும்போது, அந்தப் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்

நாடு முழுவதும் பொதுமுடக்கம் கொண்டுவந்தபின் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குச் சென்றபோது அவர்களுடன் காலில் செருப்பு இல்லாமல் நடந்து சென்ற குழந்தைகள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளன''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனிசெஃப்பின் தெற்காசியாவுக்கான இயக்குநர் ஜீன் காப் கூறுகையில், “கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்படும் லாக்டவுன் உள்ளிட்டபல்வேறு நடவடிக்கைகளால், பக்கவிளைவுகள் ஏற்பட்டு குழந்தைகள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படக்கூடும். ஆனால் குழந்தைகள் மீதான பொருளாதார நெருக்கடியின் நீண்டகாலத் தாக்கம் முற்றிலும் வேறுபட்ட அளவில் இருக்கும். அவசரகால நடவடிக்கைகளை இப்போது எடுக்காவிட்டால், கரோனா வைரஸ் எதிர்கால சந்ததியினரின் நம்பிக்கையையும் சிதைத்துவிடும்” என்றார்.

யுனிசெஃப்பின் இந்தியாவுக்கான பிரதிநிதி யாஸ்மின் ஹக் கூறுகையில், “புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளும் ஊரடங்கு காலத்தில் சாலையில் பல கி.மீ. தொலைவு நடந்து சென்று கஷ்டப்பட்டதே போதும். ஆனாலும் இன்னும் குழந்தைகள் அவர்கள் சொந்த கிராமத்துக்குச் சென்றபின்பும்கூட பாலியல் சீண்டலுக்கு ஆளாவதும், பாகுபாடு காட்டுதல், களங்கம் கற்பித்தல் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் தகவலின்படி லாக்டவுன் காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் சீண்டல், துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் 30 சதவீதம் அதிகாரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x